ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை: ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ரத்து செய்ய பொதுக்குழுவிற்கு அதிகாரம் இல்லை. அதையும் மீறி ஒற்றைத் தலைமை தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அதிமுக கட்சியின் பெயர், சின்னம் முடக்கப்படும் என்று மாவட்ட செயலாளர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதிமுக பொதுக்குழு வருகிற 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தற்போது ஒற்றைத் தலைமை கோரிக்கை பிரச்னை பூதாகரமாகியுள்ளது. இதன்படி தற்போதுள்ள ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வகித்து வரும் பதவிகளை காலி செய்து விட்டு மீண்டும் பொதுச்செயலாளர் என்ற ஒற்றைத் தலைமை பதவியை கொண்டு வர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவு நிர்வாகிகள் திடீர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இது அதிமுகவுக்குள் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓ.பன்னீர்செல்வத்தை கட்சி பொறுப்புகளில் இருந்து நிரந்தரமாக ஓரம்கட்ட சதித்திட்டம் தீட்டப்படுவதாக அவரது ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஒற்றைத் தலைமை பதவியை ஓபிஎஸ் விட்டுக் கொடுத்தால் ஜெயலலிதா, சசிகலா முன் கைகட்டி நின்றது போன்று இனி எடப்பாடி பழனிசாமியிடம் ஓபிஎஸ் கைகட்டி நிற்கும் சூழ்நிலை ஏற்படும். அதிமுக சார்பில் ஓபிஎஸ் ஒரு அறிக்கை கூட வெளியிட முடியாது. இதனால், எடப்பாடி திட்டத்தை முறியடிக்க கடந்த 5 நாட்களாக ஓபிஎஸ் கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்கிவிட்டு, ஒற்றைத் தலைமை என்ற பொதுச்செயலாளர் பதவியை வருகிற பொதுக்குழுவில் கொண்டு வந்தால் என்னென்ன பிரச்னைகளை ஏற்படும் என்று அதிமுகவின் அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று அனுப்பியுள்ள எச்சரிக்கை கடிதத்தில் கூறி இருப்பதாவது: கடந்த 12.9.2017ம் ஆண்டு பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் அதிமுகவின் சட்ட விதிகள் திருத்தப்பட்டது. அதன் அடிப்படையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ஏற்படுத்தப்பட்டது. அவர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். இவர்கள் இரண்டு பேரும் அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதற்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.