ஓமன் மன்னருடன் மோடி ஆலோசனை

புதுடெல்லி, டிச. 17- அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள ஓமன் சுல்தான் (மன்னர்) ஹைதம் பின் தாரிக்கை பிரதமர் நரேந்திர மோடி நேற்று வரவேற்று விருந்தளித்தார். வர்த்தகம், முதலீடு உள்ளிட்டவை தொடர்பாக இருதரப்பு உறவை விரிவுபடுத்துவது தொடர்பாக அவர்கள் இருவரும் கலந்துரையாடினர். ஹைதம் பின் தாரிக் ஓமன் நாட்டு சுல்தானாகவும், பிரதமராகவும் 2020 ஜனவரி மாதம் பொறுப்பேற்றார். இந்நிலையில், அவர் 3 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை அவர் டெல்லிக்கு வந்தார். அவரை விமான நிலையத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வரவேற்றார்.நேற்று காலை குடியரகத் தலைவர் மாளிகைக்கு வந்த டெல்லியில் ஹைதம் பின் தாரிக்கை குடியரகத் தலைவர் திரவுபதி முர்முவும் பிரதமர் நரேந்திர மோடியும் வரவேற்றனர். அவருக்கு ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. ஓமன் சுல்தானாக ஹைதம் பின் தாரிக் இந்தியா வருவது இதுவே முதல் முறையாகும். இந்நிலையில், அவரை வரவேற்ற பிரதமர் மோடி, “இந்தியா – ஓமன் உறவில் ஒரு வரலாற்று தருணம் இது. 26 ஆண்டுகளுக்குப் பிறகு ஓமன் சுல்தான் இந்தியாவுக்கு வருகை தருகிறார். இந்திய மக்கள் சார்பாக நான் அவரை வரவேற்கிறேன்” என்றார். டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் மோடியும் ஹைதம் பின் தாரிக்கும் கலந்துரையாடினர்.
இருநாட்டு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவை விரிவுபடுத்துவது தொடர்பாக அவ்விருவரும் உரையாடியதாக வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் “இரு நாட்டுத் தலைவர்களும், அரசியல், பாதுகாப்பு, வர்த்தகம், பொருளாதாரம். கலாச்சாரம் உள்ளிட்ட தளங்களில் இருதரப்பு உறவை பலப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடினர். உள்நாட்டு மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் அவர்கள் பேசினர்” என்று பதிவிட்டுள்ளார். காசா மீது இஸ்ரேல் இரு மாதங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிற நிலையில், இவ்விவகாரம் குறித்தும் அவர்கள் பேசியுள்ளனர். டிஜிட்டல் கட்டமைப்பு. விண்வெளி ஆராய்ச்சி. பசுமை எரிஆற்றல் கட்டமைப்பு. சுகாதாரம். சுற்றுலா, வேளாண் துறை. உணவு பாதுகாப்பு ஆகியவை குறித்தும் ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.