ஓராண்டு மழை ஒரே நாளில் கொட்டியது

தூத்துக்குடி: டிச. 18: திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பலமணி நேரம் நீடித்த மழையால் மக்கள் பரிதவிப்புக்குள்ளாயினர். பல இடங்களில் மின்சாரம் தடைபட்டது. வீடுகளை வெள்ளம் சூழ்ந்த நிலையில் மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தெற்கு இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று முன்தினம் தொடங்கிய மழை, நேற்று இரவு வரை நீடித்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வெளியே செல்ல முடியாமல் வீடுகளுக்குள் மக்கள் முடங்கினர். நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் அவதிக்குள்ளாயினர்.திருநெல்வேலி: திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சேவியர் காலனியில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. திருநெல்வேலி டவுன் வ.உ.சி. தெரு, பாரதியார் தெரு, பாளையங்கோட்டை சமாதானபுரம் பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தண்ணீர் புகுந்ததால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். இதுபோல் மனகாவலம்பிள்ளை நகர், பேட்டை, மேலப்பாளையம் பகுதிகளிலும் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. அம்பாசமுத்திரம் அருகே பொட்டல் கிராமத்தில் கனமழையால் ஊருக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் வெளியேறி அங்குள்ள திருமண மண்டபத்தில் தஞ்சமடைந்தனர். நம்பியாறு அணைப்பகுதியில் 165 மி.மீ. மழை பதிவாகியது. நம்பியாறு மற்றும் அனுமன் நதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தென்காசி: தென்காசி மாவட்டத்திலும் மிதமான மழை தொடர்ந்து பெய்துகொண்டே இருந்தது. கடனாநதி அணை முழுமையாக நிரம்பியது. அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.கன்னியாகுமரி: நாகர்கோவில், கன்னியாகுமரியில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால், பரிதவித்த மக்களை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். கன்னியாகுமரி, திற்பரப்பு உள்ளிட்ட சுற்றுலா மையங்கள் மழையால் முடங்கின. கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. ரப்பர் பால் வெட்டும் தொழில், தேங்காய் வெட்டும் தொழில், கட்டுமான தொழில் உட்பட அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டன. நாகர்கோவில் மீனாட்சி கார்டன், வடசேரி புளியடி, பாரைக்கால் மடம் பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கிய மக்களை தீயணைப்பு துறையினர் ரப்பர் படகு மூலம் மீட்டனர். அஞ்சுகிராமம், செட்டிகுளம் பகுதியில் மழையால் சாலைகள் ஆறுபோல் காட்சியளித்தன. இதனால் கன்னியாகுமரியில் இருந்து அந்த வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.நாகர்கோவில், சுசீந்திரம், மணக்குடியில் பழையாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம் சாலைகளிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 45 அடியையும், பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 24 அடியையும் நேற்று தாண்டியது. பேச்சிப்பாறை அணையில் இருந்து நேற்று காலை 10 மணிக்கு 3,000 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணையில் இருந்து 1,100 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டது. “தொடர்ந்து மழை பெய்வதால் கூடுதல் நீர் திறக்கவும் வாய்ப்புள்ளது, கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்” என, மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டார். அணைப்பகுதிகளை பொதுப்பணித்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தேர்வுகள் ரத்து: திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்றும் மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதையடுத்து, இம்மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (18-ம் தேதி) விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளானர். உயர்கல்விக்கான தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தனியார் நிறுவனங்கள் அத்தியாவசிய தேவைக்கு மட்டும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களை கொண்டு இயங்குமாறு மாவட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தி உள்ளன. தென்காசி மாவட்டத்தில் கனமழை காரணமாக இன்று நடைபெற இருந்த மக்களுடன் முதல்வர் முகாம் ஜனவரி 6-ம் தேதி நடைபெறும் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நெல்லை, தூத்துக்குடியில் பாலம் உடைந்தது: திருநெல்வேலி கொக்கிரகுளம் அருகே கீழவீரராகவபுரம், மேலநத்தம் பகுதிகளுக்கு இடையே அமைக்கப்பட்டிருந்த பாலம் கனமழையால் இடிந்து விழுந்தது. பாளையங்கோட்டையில் இலந்தைகுளம் நிரம்பி அருகிலுள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இந்த குளத்து தண் ணீர் அருகிலுள்ள சாராள் தக்கர் மகளிர் மேல்நிலைப்பள்ளிக்குள்ளும் புகுந்தது.தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணியில் இருந்து செக்காரக்குடிக்கு செல்லும் சாலையில் உள்ள ஓடையின் குறுக்கே பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதன் அருகே தற்காலிகமாக குழாய்கள் பதிக்கப்பட்டு பாலம் அமைக்கப்பட்டிருந்தது. அதனை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். நேற்று இந்த பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இந்த பாலம் கடந்த சில வாரங்களுக்கு முன்பும் மழையால் அடித்து செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.