ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் 100 பேரிடம் விரைவில் விசாரணை

சென்னை: செப். 10- கடந்த ஜூலை 11-ந் தேதி அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்த கலவர வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். வானகரத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. பொது குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட அதே நேரத்தில் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்துக்குள் பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுடன் நுழைந்தார். பூட்டப்பட்டு இருந்த கதவுகளை உடைத்து உள்ளே சென்ற அவரது ஆதரவாளர்கள் அ.தி.மு.க. அலுவலகத்தை சூறையாடியதுடன் அங்கிருந்த பொருட்களையும் திருடி சென்றனர். வழக்கு விசாரணை ராயப்பேட்டை போலீசிடமிருந்து சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று முன்தினம் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அங்குள்ள அறைகளில் சிதறி கிடந்த பொருட்களை தடயவியல் சோதனைக்காக சேகரித்து உள்ளனர்.
அ.தி.மு.க. அலுவலகத்தில் இருந்து உடைக்கப்பட்ட கதவு துண்டுகள், இரும்பு ராடு, பைப் உள்ளிட்டவைகளையும் போலீசார் கைப்பற்றி இருக்கிறார்கள். அறையில் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பீரோக்கள் குத்துவிளக்கால் ஓங்கி குத்தப்பட்டு சிதைக்கப்பட்டது போன்று காட்சியளித்துள்ளது. பீரோவில் இருந்த இது தொடர்பான ஆதாரங்களையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். அ.தி.மு.க. அலுவலகத்தில் பொருட்கள் உடைக்கப்பட்ட அறைகளில் கேமராக்கள் எதுவும் இல்லை அதே நேரத்தில் வெளிப்பக்க வளாகத்தில் கேமராக்கள் உள்ளன. கலவரம் நடந்த போது காவல்துறை சார்பில் பதிவு செய்யப்பட்ட கேமரா காட்சிகளும் தொலைக்காட்சி கேமரா காட்சிகளும் உள்ளன இவைகளை வைத்து சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.
அ.தி.மு.க. அலுவலக மோதல் தொடர்பாக கைப்பற்றப்பட்ட அனைத்து வீடியோ காட்சிகளையும் ஒரே பென்டிரைவில் போட்டு போலீசார் பாதுகாத்து வைத்திருந்தனர். இவை அனைத்தையும் ராயப்பேட்டை போலீசிடமிருந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைப்பற்றி இருக்கிறார்கள். வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் ராயப்பேட்டை அலுவலகத்தில் இருந்து கலவரம் தொடர்பாக பல்வேறு பொருட்களையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆய்வுக்காக எடுத்துச் சென்று உள்ளனர். கேமராவில் பதிவான காட்சிகளில் ஆவணங்களை எடுத்து செல்பவர்களின் புகைப்படங்களும் பொருட்களை அள்ளிச் செல்பவர்களின் புகைப்படங்களும் உள்ளன. இந்த போட்டோக்களை பார்த்து ராயப்பேட்டை போலீசார் ஓரளவு அடையாளம் கண்டு வைத்திருந்தனர். இந்த தகவல்களையும் சி.பி.சி.ஐ.டி போலீசார் வாங்கிச் சென்றுள்ளனர்.
அ.தி.மு.க. அலுவலக மோதல் தொடர்பாக ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. இந்த 4 வழக்குகளையும் அவர்களிடமிருந்து முறைப்படி பெற்றுள்ள சி.பி.சி.ஐ.டி போலீசார் புதிதாக இரண்டு வழக்குகளை பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள வழக்குகளையும் புதிதாக பதிவு செய்லது பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள். இரண்டு டி.எஸ்.பிக்கள் 4 இன்ஸ்பெக்டர்கள் இந்த விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள். அ.தி.மு.க. அலுவலக கலவர வழக்கில் தொடர்புடைய அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் 100 பேரை அடையாளம் கண்டுள்ளனர். முதல் கட்டமாக விசாரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதற்கான ஆரம்ப கட்ட பணிகளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடங்கி உள்ளனர். இதன்படி கேமரா காட்சிகளை வைத்து அடுத்த கட்டமாக 100 பேருக்கும் சம்மன் அனுப்பப்பட உள்ளது. இந்த வழக்கில் 70 பேர் வரை முன் ஜாமீன் பெற்றுள்ளனர். அது பற்றிய விவரங்களையும் போலீசார் கோர்ட்டில் வாங்கி நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தான் ஆதரவாளர்கள் அ.தி.மு.க. அலுவலகத்தில் புகுந்து தாக்குதல் நடத்தி உள்ளனர். இதையடுத்து இந்த வழக்கில் பன்னீர்செல்வம் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கிறார். அவருடன் சேர்த்து 300 பேர் வரையில் இந்த மோதல் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் ஏற்கனவே தெரிவித்திருந்தனர். இது தொடர்பாகவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதன்படி ஓ.பன்னீர்செல்வத்துக்கும் விரைவில் சம்மன் அனுப்பப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல் .ஏ. ஜே.சி .டி. பிரபாகர், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, பெங்களூர் புகழேந்தி, பெரம்பலூர் முன்னாள் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், சென்னையைச் சேர்ந்த ஓ.பி.எஸ். ஆதரவாளரான எம்.எம். பாபு, உசிலம்பட்டி கீதா, எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் புகார் தெரிவித்திருந்தனர் . இவர்களுக்கும் விரைவில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்ப உள்ளனர். இதன் மூலம் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர திட்டமிடப்பட்டு உள்ளது. வீடியோ காட்சிகளை மையமாக வைத்து தனித்தனியாக ஒவ்வொருவரையும் அடையாளம் கண்டு அவர்களிடமிருந்து அ.தி.மு.க. அலுவலகத்தில் திருடப்பட்ட பொருட்கள் அனைத்தையும் மீட்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.