ஓ.பி.எஸ்.சுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமிக்கு முதல் வெற்றி

சென்னை: ஜூலை . 20 -அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர் செல்வத்தை ஓரம்கட்டி விட்டு எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராகி இருக்கிறார். கடந்த 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தின் போது, கட்சியில் இருந்து அதிரடியாக ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். அவரது ஒருங்கிணைப்பாளர் பதவியும், பொருளாளர் பதவியும் பறிக்கப்பட்ட நிலையில் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டார். இந்த தகவலை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வங்கிகளில் முறைப்படி தெரிவித்தனர். ஓ.பன்னீர்செல்வமும் வங்கிகளுக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.
அ.தி.மு.க. உள்கட்சி விவகாரம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் புதிய பொருளாளராக யாராவது தேர்வு செய்து அறிவித்தால் அதனை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்றும், எனது அனுமதியின்றி பணபரி மாற்றங்களை மேற்கொள்ள அனுமதிக்கக்கூடாது என்றும் அதில் ஓ.பன்னீர் செல்வம் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் வங்கிகள் இதனை நிராகரித்துவிட்டு, எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று திண்டுக்கல் சீனிவாசனை அ.தி.மு.க. புதிய பொருளாளராக அங்கீகரித்துள்ளன. இதன்மூலம் இனி எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அ.தி.மு.க. வங்கி பணபரிவர்த்தனைகளை தங்குதடை இன்றி மேற்கொள்ள முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி புதிய பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்திருப்பதுடன் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்டுள்ளார். எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியில் இருந்து அவரை எடப்பாடி நீக்கியுள்ள நிலையில் அதற்கு எதிராகவும் சபாநாயகரிடம் ஓ.பி.எஸ். மனு அளித்துள்ளார். இப்படி ஓ.பி.எஸ். தொடர்ந்துள்ள பல்வேறு சட்ட போராட்டங்களை எடப்பாடி பழனிசாமி எதிர் கொண்டு வருகிறார். இந்த நிலையில் தான் அ.தி.மு.க. புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.