புதுடெல்லி, செப். 4- சந்திரயான்-3, ஆதித்யா எல்-1 வெற்றிக்குப்பின், ககன்யான் முதல் பரிசோதனை திட்டத்தை இஸ்ரோ அடுத்த மாதம் மேற்கொள்கிறது. சந்திரயான்-3 திட்டத்தை வெற்றிகரமாக முடித்த இஸ்ரோ, சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா -எல்1 விண்கலத்தையும் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
அடுத்ததாக விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ தீவிரமாக உள்ளது. அதன்படி முதல் பரிசோதனை திட்டத்தை இஸ்ரோ மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. ககன்யான் திட்டத்தில் முதல் இரண்டு ராக்கெட்டுகளில் ஆளில்லா விண்கலம் அனுப்பி பரிசோதிக்கப்படும்.
அடுத்ததாக பூமியிலிருந்து 300 முதல் 400 கி.மீ தூரத்தில் உள்ள புவியின் கீழ் அடுக்கு சுற்றுவட்ட பாதையில் விண்வெளி வீரர்கள் சில நாட்கள் சுற்றிவிட்டு திரும்பும் வகையில் விண்கலத்தை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. பாராசூட் உட்பட ககன்யான் திட்டத்துக்கான பல பரிசோதனைகள் முடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா-எல்1 விண்கலத்தை வெற்றிகரமாக ஏவிய பின் பேசிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங், ககன்யான் முதல் பரிசோதனை திட்டம் அடுத்த மாதம் மேற்கொள்ளப்படும் என்றார். பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு 2025-ம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முதல் திட்டம் மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.