கச்சா எண்ணெய் சரிந்த பிறகும் விலை குறையாத பெட்ரோல், டீசல் விலை

புதுடெல்லி: செப்.12
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. இந்நிலையில் சர்வதேச சந்தையில் கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவிற்கு கடந்த வாரம் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 90 டாலர்களுக்கும் கீழ் குறைந்தது. அதன் பின்னர் சற்று உயர்ந்து 92.84 டாலர்களாக விற்பனையானது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவடைந்த போதிலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதுதொடர்பாக மத்திய பெட்ரோலிய துறை மந்திரி ஹர்தீப்சிங்புரி கூறியதாவது:- சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பல ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்த போது இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைவாகவே இருந்தது. அப்போது எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய வேண்டாமா?. வளர்ந்த நாடுகளில் எரிபொருள் விலை உயர்வு மிக அதிகமாக உள்ளது. இந்த நிலையில் எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து காணப்பட்டபோது டீசல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.20 முதல் 25 வரையும், பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.14 முதல் 18 வரையும் எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்பட்டது. இப்போது சர்வதேச சந்தையில் விலை குறைந்து வருவதால் இழப்புகள் குறைந்து வருகின்றன என்றார்.