கடத்தி வரப்பட்ட 72 பாம்பு குட்டிகள் பெங்களூரு விமான நிலையத்தில் மீட்பு

பெங்களூரு, செப். 8: பாங்காக்கில் இருந்து கடத்தி வரப்பட்ட 72 பாம்பு குட்டிகள் பெங்களூரு விமான நிலையத்தில் கைவிடப்பட்டு சென்ற பொருள்களில் இருந்து மீட்கப்பட்டன.
பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள், புதன்கிழமை இரவு பாங்காக்கில் இருந்து விமானத்தில் வந்த‌ பெண் ஒருவர் கைவிட்டுச் சென்ற பொருள்களை திறந்து பார்த்தபோது, ​​​​அதில் 17 தாய்லாந்து கிங் கோப்ராக்கள் உட்பட 72 பாம்புகள் இருந்தன.
கடந்த மாதம் பாங்காங்கில் இருந்து வந்த விமானத்தில் பாம்புகள், முதலைகள், ஆமைகள் மற்றும் பல்லிகள் உட்பட 230 ஊர்வன ஆகியவற்றை கடத்தி வந்த‌ பயணியை ஆகஸ்ட் 21 ஆம் தேதி சுங்க அதிகாரிகள் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து 17 நாட்களுக்குப் பிறகு, தாய் ஏர் ஏசியா விமானத்தில் கடத்தி வரப்பட்ட பாம்புகள் மீட்கப்பட்டன. தாய்லாந்து கிங் கோப்ராக்கள் மிகவும் விஷமுள்ள ஊர்வன. அவை வெளிநாட்டு இனங்கள், அவை கடிப்பதால், இந்தியாவில் விஷ எதிர்ப்பு மருந்துகள் இல்லை என்று சுங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விமான நிலையத்தில் உள்ள சிசிடிவியில், பைகளுடன் தரையிறங்கிய பெண் இருப்பதைக் கண்டறிந்தனர். பயணிகள் பெயர் பட்டியலில் இருந்த‌ அவரது அடையாளத்தை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். முதற்கட்ட விசாரணையில் அவர் சென்னை விமான நிலையத்திலிருந்து நான்கு முறை பயணம் செய்திருப்பது தெரியவந்துள்ளது. அவர் வனவிலங்கு கடத்தலுக்காக, முதல் முறையாக பெங்களூருக்கு வந்திருக்கலாம் என்று சந்தேகித்துள்ளோம் என்று மற்றொரு விசாரணை அதிகாரி தெரிவித்தார்.