கடன் கட்டவில்லை என்றாலும் வாகனங்களை பறிமுதல் செய்ய கூடாது

பாட்னா, மே 26- கடனைத் திருப்பிச் செலுத்தாததற்காக உரிமையாளர்களிடமிருந்து மீட்பு முகவர்கள் மூலம் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் வாகனங்களை வலுக்கட்டாயமாக எடுத்துச் செல்வது வாழ்வு மற்றும் வாழ்வாதாரத்திற்கான அடிப்படை உரிமையை மீறுவதாகும் என்று பாட்னா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ‘மீட்பு முகவர்கள்’ என்று அழைக்கப்படும் குண்டர்கள் வாகனங்களை வலுக்கட்டாயமாக பறிமுதல் செய்வதற்கு உச்ச நீதிமன்ற உத்தரவு முற்றிலும் தடை செய்கிறது. இதுதொடர்பான 5 மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி பிரசாத், “வாடிக்கையாளர் மாத தவனை செலுத்தத் தவறியிருந்தால், வாகனத்தை பறிமுதல் செய்ய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மீட்பு முகவர்களின் சேவைகளைப் பயன்படுத்த முடியாது. அத்தகைய மீட்பு முகவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிடுகிறேன். வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் வாகனக் கடனைப் பத்திரப்பதிவு விதிகளைப் பின்பற்றி மட்டுமே வசூலிக்க வேண்டும்” என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.