கடப்பா மக்களவைத் தொகுதியில் ஷர்மிளா போட்டி

கடப்பா, ஏப். 3:ஆந்திர மாநிலத்தில் போட்டியிட உள்ள 5 எம்பி மற்றும் 114 எம்எல்ஏ வேட்பாளர்களின் முதல்கட்ட பட்டியலை காங்கிரஸ் மேலிடம் நேற்று வெளி யிட்டது. கடப்பா மக்களவைத் தொகுதியில் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஒய்.எஸ். ஷர்மிளா போட்டியிடுகிறார்.
ஆந்திர மாநிலத்தில் வரும் மே 13-ம் தேதி, 175 சட்டப்பேரவை மற்றும் 25 மக்களவை தொகுதிகளுக்கு ஒரேநாளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையொட்டி, இம்முறை, தெலுங்கு தேசம் கட்சியுடன், பாஜக மற்றும் ஜனசேனா கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.
இக்கட்சிகள் ஏற்கெனவே அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களையும் அறிவித்து விட்டதோடு, மும்முரமாக பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகின்றன.
முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும் தனது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தொகுதி வேட்பாளர்களை ஏற்கெனவே அறிவித்து அவரும் பேருந்து யாத்திரை செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், நேற்று டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் வேணுகோபால் ஆந்திர மாநிலத்தில் காங்கிரஸ் தரப்பில் போட்டியிடும் 5 மக்களவை மற்றும் 114 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.
அதன்படி, கடப்பா மக்களவைத் தொகுதியில் ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முதல்வர் ஜெகனின் தங்கையான ஒய்.எஸ். ஷர்மிளா போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிதரப்பில் ஷர்மிளாவின் சித்தப்பா மகன் அவினாஷ் ரெட்டி களத்தில் இறக்கப்பட்டுள்ளார். காக்கிநாடா – பல்லம் ராஜு, பாபட்லா – ஜே.டி. சீலம், ராஜமுந்திரி – ருத்ரராஜு, கர்னூல் – ராம்புல்லய்ய யாதவ் ஆகியோர் மக்களவை தேர்தலில் போட்டியிட உள்ளனர்.கடப்பா மாவட்டம், இடுபுலபாயா பகுதியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ஷர்மிளா நேற்று செய்தியாளர்களிடம் பேசியதாவது: காங்கிரஸ் கட்சி தரப்பில் கடப்பாவில் இருந்து போட்டியிடுகிறேன்.நான் போட்டியிட்டால், எங்களின் குடும்பமே பிளவுபடும் என்று தெரிந்தும் போட்டிக்கு தயாராக இருக்கிறேன்.2019 தேர்தலுக்கு முன் என் அண்ணனான ஜெகன், “எனக்கு ஷர்மிளா தங்கை மட்டுமல்ல, மகளும் கூட” என கூறினார். ஆனால், தேர்தல் நடந்து, அவர் முதல்வரான பின்னர் என்னை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார்.அவரை நம்பிய அனைவரையும் அவர் ஏமாற்றி விட்டார். எங்களின் சித்தப்பாவான விவேகானந்த ரெட்டியை கொலை செய்தவர்களுக்கு, என் அண்ணன் ஜெகன் உதவி செய்து, அவர்களை சிறைக்கு அனுப்பாமல் காப்பாற்றி வருகிறார். அது மட்டுமின்றி, கொலை செய்தவரையே கடப்பா தொகுதியில் தனது கட்சி மக்களவை வேட்பாளராக நிறுத்தி உள்ளார். இதனை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.கொலை செய்தவருக்கே ‘டிக்கெட்’ கொடுப்பதா? அதனால் தான் நானே களத்தில் இறங்கி உள்ளேன். இந்த இக்கட்டான சூழ்நிலையில் மக்கள் எனக்கு வாக்களித்து ஆசீர்வதிக்க வேண்டும் என கோருகிறேன். இவ்வாறு ஷர்மிளா மனம் உருக பேசினார்.