கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களி புயல் எச்சரிக்கை கூண்டு

சென்னை: நவம்பர் 29-
டிட்வா புயல் காரணமாக தூத்துக்குடி, பாம்பன், கடலூர், நாகை, காரைக்கால் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு துறைமுகங்களிலும் 4ஆம் எண் கொண்ட புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் 2ஆம் எண் கொண்ட புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து தமிழ்நாடு நோக்கி நகர்ந்து வரும் டிட்வா புடல் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் இருந்து சுமார் 430 கிமீ தூரத்தில் மையமிட்டுள்ள டிட்வா புயல், மணிக்கு 7 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. நாளை அதிகாலை டிட்வா புயல் வடதமிழகம், புதுச்சேரி கடற்கரையை அடையும் என்று கணிக்கப்படுகிறது. இந்த புயல் நெருங்கி வரும் சூழலில் டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்றிரவு முதலே கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்திருப்பதால், சாமானிய மக்கள் பாதிப்பை சந்திக்க தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் கடலூர் துறைமுகத்தில் 4ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வழக்கமாக புயல் உருவாகி கடலோரப் பகுதிகள் நோக்கி நகர்ந்து வரும் போது துறைமுகங்களில் புயல் குறித்த எச்சரிக்கைகளை விடுக்கும் வகையில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படும். மொத்தமாக 1 முதல் 11 எண்கள் வரையிலான எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படும். ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு விளக்கம் இருக்கின்றன.
பகல் நேரங்களில் மூங்கில் தட்டைகளால் ஆன கூண்டுகளும், இரவில் வண்ண ஒளி விளக்குகளால் ஆன புயல் எச்சரிக்கை கூண்டுகளும் ஏற்றப்படும். அந்த வகையில் கடலூர் துறைமுகத்தில் 4ஆம் எண் கொண்ட புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 4ஆம் எண் கொண்ட புயல் எச்சர்க்கை கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகத்தில் உள்ள கப்பல்களுக்கு ஆபத்து மற்றும் மோசமான வானிலை நிலவுவதை குறிக்கிறது.