கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து

புதுடெல்லி, ஜன. 3- சுருக்கு மடி வலை விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக தமிழக மீனவர் சங்கங்கள் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் உரிய விளக்கங்களுடன் கூடிய அறிக்கையை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு கடந்த மாதம் 16ம் தேதி உத்தரவிட்டது.இந்நிலையில், தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமணன் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பதில் மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், சுருக்குமடி வலையை கடலில் பயன்படுத்த அனுமதித்தால் உயிரியல் செயல்முறைக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். மேலும், கடலில் 12 நாட்டிகல் மைல்களுக்கு அப்பால் தான் சுருக்கு மடி வலையை பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிப்பது கடினமான காரியம். சுருக்கு மடி வலையானது மீனவர்கள் இடையே சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும். அதே போன்று, மோட்டார் படகுகள் மூலம் சுருக்குமடி வலையை பயன்படுத்தி ஒருமுறை கடலுக்கு சென்று 1.5 முதல் 2.5 டன் வரை மீன்களை பிடிப்பதால், பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இதனை அடிப்படையாக கொண்டு சுருக்குமடி வலைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கான உரிமமும் கொடுப்பதை கடந்த 2000ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. தடை செய்யப்பட்ட இதனைப் பயன்படுத்துவதால் அழிவுநிலையில் இருக்கும் டால்பின்கள், கடல் பாலூட்டிகள், கடல் ஆமைகள், சுறாக்கள் உள்ளிட்டவற்றுக்கு உறுப்பிழப்புகள் ஏற்படுத்தி பேரழிவை ஏற்படுத்துகிறது. கிழக்கு கடற்கரை பகுதிகளில் சுருக்குமடி வலை பயன்பாட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து எந்த ஆணையமும், எந்த அதிகார அமைப்பும், நிபுணர்கள் குழுவும் ஆய்வு செய்யவில்லை. ஏற்கனவே செய்யப்பட்ட ஆய்வுகள் அனைத்து மேற்கு கடற்கரை பகுதிகளில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டவையாகும். எனவே சுருக்குமடி வலை விவகாரத்தில் முடிவுகள் எடுப்பதற்கு முன் கிழக்கு கடல் பகுதியையும் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் சுருக்குமடி வலை பயன்பாட்டை அனுமதிக்க முடியாது என்ற முடிவு மாநில அரசின் அதிகார வரம்பாகும். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு சுருக்குமடி வலையை பயன்படுத்த கோரும் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.