கடுமையாக்கப்பட்ட துப்பாக்கி உரிமை சட்டம்

நியூயார்க், ஜூன் 7-
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் பஃபலோ சூப்பர் மார்க்கெட்டில் கடந்த மாதம் கவச உடை அணிந்த வந்த 18 வயது இளைஞர் ஒருவர் திடீரென சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்த தாக்குதலில் 10 ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் பலியாகினர்.
இந்த துப்பாக்கிச் சூட்டை அங்கிருந்த முன்னாள் போலீஸ் அதிகாரி ஒருவர் சரியான நேரத்தில் தடுத்ததால் அதிகமான உயிர்ப் பலி தடுக்கப்பட்டது.
துப்பாக்கி சூடு சம்பவத்தை நடத்திய பெய்டன் ஜென்ட்ரான்(18) என்ற அந்த இளைஞர் படுகொலை செய்தபோது கறுப்பின சமூகத்தை குறிவைத்ததாக ஒப்புக்கொண்டார்.
இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கைத்துப்பாக்கி சட்டங்களை கடுமையாக்க கூறி சட்டம் இயற்றுபவர்களுக்கு கோரிக்கை விடுத்தார். இந்த நிலையில் தற்போது நியூயார்க் மாகாண கவர்னர் துப்பாக்கி சீர்திருத்த சட்டங்களின் தொகுப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
மாநில செனட்டில் நிறைவேற்றப்பட்ட துப்பாக்கி சீர்திருத்த சட்டத்திற்கு கவர்னர் கேத்தி ஹோச்சுல் ஒப்புதல் அளித்துள்ளார்.
பஃபலோவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் நடந்த இனவெறி படுகொலையைத் தொடர்ந்து துப்பாக்கிச் உரிமை சட்டங்களை கடுமையாக்கி உத்தரவிட்டுள்ள அவர் துப்பாக்கி வாங்குவதற்கான வயதை வரம்பை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தியுள்ளார். பொதுமக்கள் கவச உடை போன்றவற்றை வாங்கவும் இந்த சட்டம் தடைவிதிக்கிறது.
ஏற்கனவே அமெரிக்காவின் கடுமையான துப்பாக்கி சட்டங்கள் உள்ள மாகாணங்களில் நியூயார்க் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.