கடும் குளிர் – பள்ளிகளுக்கு விடுமுறை

புதுடெல்லி:ஜன. 17: வடமாநிலங்களில் உறைய வைக்கும் குளிர் நிலவுகிறது. இதன்காரணமாக ஏராளமான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. விரைவு ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
வடமாநிலங்களில் கடந்த டிசம்பர் மாதம் முதல் கடுமையான பனிப்பொழிவு நீடிக்கிறது. இதன்காரணமாக இந்த மாத தொடக்கத்தில் டெல்லி, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. கடந்த வாரம் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால், உறைய வைக்கும் குளிர் நீடிப்பதால் இந்த வாரம் பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. பிஹாரில் வரும் 20-ம் தேதி வரை, 1 முதல் 8-ம்வகுப்பு வரையிலான பள்ளிகள் செயல்படாது. 9 முதல் 12-ம் வகுப்பு வரை காலை 9 மணி முதல் மாலை 3.30 மணி வரை பள்ளிகள் செயல்படும் என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.டெல்லி உள்ளிட்ட பெரும்பாலான வடமாநிலங்களில் இன்று வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.உத்தர பிரதேசத்தில் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, அந்த மாநிலத்தின் சில பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே பள்ளிகள் செயல்படுகின்றன.பனிமூட்டம் காரணமாக டெல்லி விமான நிலையத்தில் நேற்று முன்தினம் 100 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. 10 விமானங்கள் வேறுவிமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. வடமாநிலங்கள் முழுவதும் சுமார் 150 விரைவு ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. சில ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.