கடைசி வரை போராடிய விதம் சிறப்பானது: ஆர்சிபி கேப்டன் டு பிளெஸ்ஸிஸ்

பெங்களூரு, ஏப். 17- ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் பெங்களூருவில் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தியது. முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 287 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 277 ரன்கள் குவித்த தனது சொந்த சாதனையை ஹைதராபாத் அணி முறியடித்தது. அந்த அணி இந்த சீசனில் மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் குவித்திருந்தது. 288 ரன்கள் இலக்கை துரத்திய பெங்களூரு அணியானது கடைசி வரை போராடியது. ஆனால் அந்தஅணியால் 7 விக்கெட்கள் இழப்புக்கு 262 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 35 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 83 ரன்கள் விளாசிய தினேஷ் கார்த்திக் போராடிய விதம் அனைவராலும் பாராட்டக்கூடியதாக இருந்தது. பெங்களூரு அணிக்கு இது 6-வது தோல்வியாக அமைந்தது. அந்த அணி 7 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 6 தோல்வியுடன் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இன்னும் 7 ஆட்டங்களே உள்ள நிலையில் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை பெற வேண்டுமானால் எஞ்சியுள்ள அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியான நிலைக்கு பெங்களூரு அணி தள்ளப்பட்டுள்ளது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு பின்னர் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் கூறியதாவது: டி20 கிரிக்கெட் போட்டிக்கு தகுந்தவாறு ஆடுகளம் இருந்தது. பேட்டிங்கை பொறுவத்தவரையில் மேம்பட்ட செயல் திறன் எங்களிடம் இருந்து வெளிப்பட்டது. கடைசி வரை இலக்கை நெருங்க முயற்சி செய்தோம். ஆனால் 288 ரன்கள் என்பது தொலைவில் இருந்தது. இது கடினமானது. நாங்கள் சில விஷயங்களை முயற்சித்தோம். நம்பிக்கை குறைவாக இருக்கும் போது மறைப்பதற்கு வழிகள் இருக்காது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கடினமான ஆட்டமாக அமைந்தது. பேட்டிங்கில் சில பகுதிகளில் நாங்கள் வேலை செய்ய வேண்டும். பவர்பிளேவுக்குப் பிறகு ரன் ரேட் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இலக்கை துரத்திய போது வீரர்கள் கைகொடுத்தனர். ஒருபோதும் முயற்சியை அவர்களை கைவிடவில்லை. போராடுவதை பார்க்க சிறப்பாக இருந்தது. பந்துவீச்சில் 30 முதல் 40 ரன்களை அதிகம் வழங்கிவிட்டோம். இவ்வாறு டு பிளெஸ்ஸிஸ் கூறினார்.