கட்சிக் கொடிக்கம்பம் வழக்கில் திடீர் திருப்பம்

மதுரை: ஆக 14-
பொது இடங்​களில் அமைக்​கப்​பட்​டுள்ள கட்சி கொடிக் கம்​பங்​களை அகற்ற வேண்​டும் என்ற தனி நீதிப​தி​யின் உத்தரவை உச்ச நீதி​மன்​றம் உறுதி செய்​துள்​ள​தால், தனி நீதிபதி உத்​தர​வுக்கு எதி​ரான மேல்​முறை​யீடு மனுக்​களை உயர் நீதிமன்றம் உத்​தரவு எது​வும் பிறப்​பிக்​காமல் முடித்​து​வைத்​தது. இதையடுத்​து, பொது இடங்​களில் உள்ள கொடிக்​கம்​பங்​களை அகற்று​வதற்​கான தடை நீங்​கி​யுள்​ளது.
இந்​நிலை​யில், கொடிக் கம்​பங்​களை அகற்​று​வ​தில் இருந்து மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சிக்கு விலக்கு அளிக்​கக் கோரி அக்கட்சியின் பொதுச் செய​லா​ளர் சண்​முகம் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மேல்​முறை​யீட்டு மனு தாக்​கல் செய்​தார். இதை விசா​ரித்த 2 நீதிப​தி​கள் அமர்​வு, விசா​ரணையை 3 நீதிப​தி​கள் அமர்​வுக்கு மாற்​றியது.
இந்த மனுவை நீதிப​தி​கள் எஸ்​.எம்​.சுப்​பிரமணி​யம், ஆர்​.​விஜயகு​மார், எஸ்​.சவுந்​தர் அமர்வு விசா​ரித்து, “அனைத்து கொடிக் கம்பங்களை​யும் ஒரே இடத்​தில் நிறு​வலாம். இது தொடர்​பாக கட்​சிகள், அமைப்​பு​கள் இடை​யீட்டு மனுக்​களை தாக்​கல் செய்யலாம்.
அது​வரை கொடிக் கம்​பங்​களை அகற்​றும் விவ​காரத்​தில் தற்​போதைய நிலை தொடர வேண்​டும்” என்று உத்​தர​விட்​டது. இதையடுத்​து, திமுக, அதி​முக, மதி​முக, திக, விடு​தலை சிறுத்​தைகள், தவெக, இந்​திய கம்​யூனிஸ்ட், மக்​கள் வாழ்​வுரிமை கட்சி உள்​ளிட்ட 20-க்​கும் மேற்​பட்ட இடை​யீட்டு மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டன.
இந்த மனுக்​கள் விசா​ரணை நிலு​வை​யில் இருந்த நிலை​யில், கொடிக் கம்​பங்​களை அகற்​றும் சென்னை உயர் நீதி​மன்ற உத்தரவை எதிர்த்து கதிர​வன் என்​பவர் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​தார்.