கட்டண வசூலில் முன்னாள் ராணுவத்தினர்

சென்னை: ஜூன் 10-
மெரினா கடற்கரையில் வாகன நிறுத்த கட்டணம் வசூலிக்கும் பணியில் முன்னாள் ராணுவத்தினரை நியமிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி, வருவாயை அதிகரிக்கும் பொருட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் வாகன நிறுத்தங்களை மெரினா கடற்கரை, பெசன்ட்நகர் கடற்கரை, தியாகராயநகர் உள்ளிட்ட 170-க்கும் மேற்பட்ட இடங்களில் அமைத்துள்ளது.
அங்கு நிறுத்தப்படும் வாகனங்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்க ஒப்பந்த அடிப்படையில் டூர்க் மீடியாசர்வீஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் எஸ்எஸ் டெக் நிறுவனத்துக்கு மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. இரு சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.5, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கவும் மாநகராட்சி
உத்தரவிட்டுள்ளது.
இந்த கட்டணத்தை விட அதிகமாக வசூலிப்பதை தடுக்க, வாகனநிறுத்த செயல்பாடுகளை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் ஸ்மார்ட் வாகன நிறுத்தங்கள் செயல்படும் பகுதிகளில் 25 மீட்டர் இடைவெளியில் அறிவிப்பு பலகையை வைக்க வேண்டும்.
அதில், வாகன நிறுத்த கட்டண விவரம் மற்றும் அதிக கட்டண வசூல் தொடர்பான புகார் தெரிவிக்க, கட்டண வசூல் கண்காணிப்பாளர் மற்றும் மாநகராட்சியின் உரிமம் ஆய்வாளர் ஆகியோரின் தொடர்பு எண்கள் குறிப்பிட்டிருக்க வேண்டும்
என்று அதிகாரிகளுக்கு மாநகராட்சி உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில், அண்மையில் மெரினா கடற்கரையில் ஆந்திராவை சேர்ந்த கார் ஓட்டுநரிடம் ரூ.300 கட்டணம் கேட்டு, கட்டண வசூலிப்பாளர்கள் தாக்கிய விவகாரம் வெளியானது.
மேலும், மெரினா கடற்கரையில் அண்மைக் காலமாக விதிகளை மீறிபேருந்து, வேன்களுக்கு ரூ.400 வரையும், கார்களுக்கு ரூ.100 முதல் ரூ.300 வரையும், இருசக்கர வாகனங்களுக்கு ரூ.30 வரையும் கட்டணம் வசூலித்ததாகவும், அதற்கு ரசீதும் கொடுப்பதில்லை எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
தற்போது இந்த ஒப்பந்த நிறுவனத்தின் கட்டண வசூல் அனுமதி காலம் மார்ச் மாதமே நிறைவடைந்த நிலையிலும் கட்டணம் வசூலித்து வருவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.