கட்டாய மக்கள் தொகை கட்டுப்பாடு பாலின ஏற்றத்தாழ்விற்கு வழிவகுக்கும்

காந்திநகர்:செப்.5- கட்டாயமாக மக்கள் தொகையைக் கட்டுப்படுதினால் அது பாலின ஏற்றத்தாழ்விற்கு வழிவகுக்கும் என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் எச்சரித்துள்ளார்.
‘The India Way: Strategies for an Uncertain World’ என்ற தனது புத்தகத்தின் குஜராத்தி மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழாவில் அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். குஜராத் மாநிலம் காந்திநகரில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்றுப் பேசிய ஜெய்சங்கர், “இந்திய மக்கள்தொகை சமீப காலமாக குறைந்து வருகிறது. கல்வி, சமூக விழிப்புணர்வு, மக்களின் வளம் ஆகியவையே இதற்குக் காரணம். அதனால், இந்தியாவிற்கு கட்டாய மக்கள் தொகை உத்திகள் தேவையில்லை. கட்டாயமாக மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தினால் அது பாலின ஏற்றத்தாழ்வை அதிகரிக்கும்” என்றார். கடந்த சில ஆண்டுகளாகவே மக்கள் தொகை கட்டுப்பாடு சட்ட மசோதாவைக் கொண்டுவருவது பற்றிய விவாதங்கள் நடைபெறுகின்றன. மக்கள் தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வரிச் சலுகை, கல்விச் சலுகை, வேலைவாய்ப்பு முன்னுரிமை அளிப்பது குறித்து இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளது. இருப்பினும் எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பால் இது இன்றுவரை தாக்கலாகவில்லை. இந்நிலையில் தான் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இந்தியாவில் கட்டாய மக்கள் தொகை கட்டுப்பாடு தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், “இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உருமாறியுள்ளது” என்று கூறினார். இஸ்ரேலுடனான உறவில் அண்மைக்காலமாக இந்தியா கடுமை காட்டுவது தொடர்பான கேள்விக்கு, “சில அரசியல் காரணங்களுக்காக இந்தியா இஸ்ரேலுடனான உறவை கட்டுப்படுத்தியுள்ளது. வாக்குவங்கி அரசியலுக்காக தேச நலனை தள்ளிவைத்த காலம் கடந்துவிட்டது” என்றார். இஸ்ரேலுக்கு சென்ற முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இஸ்ரேலுடன் இணக்கம் காட்டுவதை இந்தியா நிறுத்தியுள்ளது.

ஐ.நா.வின் கணிப்பு: சுதந்திரத்திற்குப் பின்னர் இந்தியாவின் மக்கள் தொகை விகிதத்தில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 1951ல் இந்தியா மக்கள் தொகை வெடிப்படைக் கண்டது. அதனையடுத்து பிறப்புவிகிதத்தில் சரிவை சந்தித்தது.
ஐ.நா. மக்கள் தொகை கணிப்பு, 2022 அறிக்கையின்படி இந்திய 2023ல் உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்தியா தற்போது உலக மக்கள்தொகையில் 17.5 சதவீதத்தை தன்வசம் கொண்டுள்ளது. 2030ல் இந்திய மக்கள் தொகை 150 கோடியாக அதிகரிக்கும், 2050ல் இந்திய மக்கள் தொகை 166 கோடியாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2021ல் இந்தியாவின் மொத்த இனப்பெருக்க விகிதம் சரிந்தது. ஒரு பெண்ணுக்கு தலா 2 குழந்தை என்றளவில் குறைந்துள்ளது.