கட்டிட பணியின்போது மண் சரிந்து 3 தொழிலாளர்கள் பரிதாப பலி

மடிகேரி : நவம்பர் . 1 – கட்டிட பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென மண் சரிந்து விழுந்ததில் அதன் அடியில் சிக்கி மூன்று ஏழை தொழிலாளர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் நகரின் ஸ்டீவர்ட் ஹில் லே அவுட்டில் நடந்துள்ளது. மணல் குவியலில் சிக்கி உயிரிழந்த மூன்று தொழிலாளர்களையும் தீ அணைப்பு படையினர் மற்றும் போலீசார் தேடி கண்டு பிடித்து வெளியே எடுத்துள்ளனர். பெலகாவி மாவட்டத்தின் சிக்கோடி தாலுகாவை சேர்ந்த பசப்பா , நிங்கப்பா , மற்றும் ஆனந்தா ஆகியோர் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் . தனியார் நிலம் ஒன்றில் தடுப்பு சுவர் அமைக்க மண்ணை தோண்டிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக மற்றொரு தொழிலாளி ராஜு என்பவர் மற்ற தொழிலாளிகளின் உதவியுடன் மண் சரிவிலிருந்து வெளியே வந்து தப்பித்துள்ளார். மற்ற மூன்று பேரும் மண் சரிவிலிருந்து வெளியேற இயலாமல் அதற்குள்ளேயே உயிரிழந்துளளனர். இந்த பணியில் சுமார் 9 தொழிலாளர்கள் வேலை செய்து வந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறை ஊழியர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு மண்ணிற்குள் புதைந்திருந்த தொழிலாளிகள் உடல்களை மீது மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மடிகேரி தொகுதி எம் எல் ஏ முனைவர் மந்தர் கௌடா மாவட்ட போலீஸ் உயரதிகாரி கே ராமராஜன் , நகரசபை தலைவர் அனிதா பூவய்யா , உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டுள்ளனர்.