கண்களை துணியால் கட்டிக்கொண்டு மொபட் ஓட்டி பெண் சாதனை

திருவண்ணாமலை : மார்ச் 9-
உலக மகளிர் தினத்தையொட்டி பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருவண்ணாமலை அம்மையப்பர் தொண்டு நிறுவனம் மற்றும் சிவனடியார் சாதுக்கள் சேவை மையம் சார்பில் திருவண்ணாமலையை சேர்ந்த யோகா பயிற்சியாளர் கல்பனா தன்னுடைய இருகண்களையும் துணியால் கட்டிக்கொண்டு 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு மொபட் ஓட்டி சாதனை புரிந்தார். அந்த சாதனை நிகழ்ச்சி திருவண்ணாமலை கிரிவல பாதை செங்கம் ரோடு சந்திப்பு வலம்புரி விநாயகர் கோவில் அருகில் தொடங்கியது. நிகழ்ச்சியை மாவட்ட சமூக நல அலுவலர் மீனாம்பிகை மற்றும் திருவண்ணாமலை வன சரக அலுவலர் சீனிவாசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் கல்பனா கண்களை கட்டி கொண்டு கிரிவல பாதையில் சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு மொபட்டை ஓட்டி சென்று அபாய மண்டபம் அருகில் நிறைவு செய்தார்.
நிகழ்ச்சியில் சிவனடியார் சாதுக்கள் சேவை மையத்தின் நிறுவனர் பரதேசி நாகராஜன், அறிவியல் ஆசிரியர் ஹயாத்பாஷா, துரைசாமி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.