கண்காணிப்பு வளையத்தில் ஜாபர் சாதிக் குடும்பம்

சென்னை: மார்ச் 5:
போதை பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக்கின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பிரபலங்கள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: டெல்லியில் உள்ள மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் மேற்குடெல்லியின் கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோனில் போதை பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் ரூ.2 ஆயிரம் கோடிமதிப்புள்ள 50 கிலோ ரசாயனப் பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
இதில், தொடர்புடைய தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மூளையாகச் செயல்பட்டது தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்தவருமான ஜாபர் சாதிக் என்பது தெரிந்தது.இதையடுத்து, அவரை விசாரிக்க முயன்றபோது தலைமறைவானார். அவர் வெளிநாடுதப்பிச் செல்வதை தடுக்க, அனைத்து விமான நிலையங்களுக்கும் ‘லுக்-அவுட்’ நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அவரது 8 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன.
பட்டியல் தயாரிப்பு: மேலும், ஜாபர் சாதிக் வீட்டுக்கு வந்து சென்றவர்கள் யார் யார், என்பதைக் கண்டறிய அவரது வீட்டில் இருந்த சிசிடிவி தொடர்பான ஹார்ட் டிஸ்க்கையும் போதை பொருள் தடுப்பு பிரிவினர் டெல்லி கொண்டு ஆய்வு நடத்தினர். இதில் சினிமா பிரபலங்கள், நண்பர்கள், அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள், தொழில் அதிபர்கள், முகவர்கள் என பல்வேறு தரப்பினர் ஜாபர் சாதிக்கின் வீட்டுக்கு வந்து சென்றது தெரியவந்துள்ளது. அவர்களின் பட்டியலை டெல்லி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் தயாரித்து வருகின்றனர்.
ஜாபர் சாதிக் பிடிபட்டால் மட்டுமே போதை பொருள் கடத்தலின் முழு பின்னணியும் தெரியவரும். அவர் தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் பட்சத்தில், அவரது தொடர்பில் இருந்தவர்களுக்கு சம்மன் கொடுத்து நேரில் விசாரிக்க போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.