கத்திரி வெயில் நாளை தொடக்கம்

சென்னை: மே 3- கோடை வெயில் இந்த ஆண்டு மக்களை பாடாய் படுத்தி வருகிறது. இந்த ஆண்டு பிப்ரவரி இறுதியில் தனது கோரமுகத்தை காட்டத்தொடங்கிய வெயில்.. ஏப்ரல் முழுவதும் உக்கிரமாக இருந்தது. இதனால், மக்கள் கடும் அவஸ்தைக்கு உள்ளாகினர்.
அதிலும் உள் மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. இயல்பை விட இந்த ஆண்டு மிக அதிகமாக வெப்பம் நிலவியதால் மக்கள் தவித்து வருகிறார்கள்.
கோடை வெயிலில் இருந்து தப்பிக்க மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே யோசிக்கும் அளவுக்கு வெப்பம் தகிக்கிறது. நீர் ஆகாரங்கள் அதிகம் உட்கொண்டு வெயிலின் தாக்கத்தை சமாளித்து வருகிறார்கள். இதுவரை பார்த்தது வெறும் ட்ரெயிலர்தான் இனிதான் மெயின் பிக்‌ச்சரே இருக்கு என்று சொல்லும் அளவுக்கு மக்களை பயம் காட்ட வர இருக்கிறது அக்னி நட்சத்திரம் எனக் கூறப்படும் கத்தரி வெயில் காலம்.
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கத்திரி வெயில் காலம் என்று சொல்வார்கள். வானிலை ஆய்வு மையத்தை பொறுத்தவரையில் கத்தரி வெயில் என்ற வார்த்தையை பயன்படுத்துவது கிடையாது. வானிலை மையம் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை கோடை காலம் என்றே சொல்கிறது. எனினும், தமிழ் பஞ்சாங்கம் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் அக்னி நட்சத்திரம் கணக்கிடப்பட்டு வருகிறது. அதன்படி பார்த்தால், இந்த ஆண்டு கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது.இந்த கத்திரி வெயில் காலம் வரும் 28 ஆம் தேதி வரை அதாவது, 25 நாட்கள் தொடர்ந்து வாட்டி வதைக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.