கன்டெய்னரில் கட்டுக் கட்டாக பணமா?

சென்னை: மார்ச். 26 – ஹரியாணாவில் இருந்து சென்னைக்கு வந்த கன்டெய்னர் லாரியில் கட்டுக் கட்டாக பணம் இருப்பதாக வந்த ரகசிய தகவலை அடுத்து, அந்த வாகனத்தை பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
கூட்டணி, வேட்பாளர் அறிவிப்பு, மனுதாக்கல், பிரச்சாரம் என மக்களவை தேர்தல் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இது ஒருபுறம் இருக்க, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். போலீஸாருடன் இணைந்து வாகன தணிக்கையும் நடத்தி வருகின்றனர்.
பல பகுதிகளிலும் வாகன சோதனையின்போது, கிலோ கணக்கில் தங்கம், லட்சக் கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஹரியாணா மாநிலத்தில் இருந்து சென்னை மாதவரத்துக்கு கன்டெய்னர் லாரி ஒன்று வருவதாகவும், அதில் கட்டுக் கட்டாக கோடிக் கணக்கில் பணம் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சென்னை பறக்கும் படை அதிகாரிகள் கண்காணிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தினர். வில்லிவாக்கம் அருகே போலீஸாருடன் ஒருங்கிணைந்து வாகன தணிக்கையில் ஈடுபட்ட பறக்கும் படையினர், அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரியை தடுத்து நிறுத்தினர். அந்த லாரியை மக்கள் நடமாட்டம் இல்லாத தனி மைதானத்துக்கு கொண்டு சென்று, தீவிர சோதனை மேற்கொண்டனர்.
கன்டெய்னர் லாரிக்குள் 500-க்கும் மேற்பட்ட மூட்டைகள் இருந்தன. அவற்றில் பணம் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பிரித்துப் பார்த்தபோது, எல்லா மூட்டைகளிலும் பாஜக சின்னம் பொறிக்கப்பட்ட கொடிகள், தொப்பிகள் இருப்பது தெரியவந்தது. தேர்தல் பிரச்சாரத்துக்காக சென்னையில் உள்ள பாஜகவினருக்கு இவை அனுப்பப்பட்டுள்ளன என்றும் தெரியவந்தது.
அதை பறிமுதல் செய்த தனிப்படையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணைக்கு பிறகு, சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.