
பெங்களூர், அக். 24- கன்னட ‘பிக்பாஸ்’ ரியாலிட்டி ஷோ வில் இடம் பெற்றிருந்த போட்டியாளர் புலி நகத்தின் பதக்கத்தை அணிந்திருந்ததால் அவரை வனத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து வருகிறது இதில் போட்டியாளராக வர்த்தூர் சந்தோஷ் என்பவர் பங்கேற்று வருகிறார். அவர் புலி நகத்தின் பதக்கத்தை அணிந்து இருந்ததாக வனத் துறை அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. இதனால் பிக்பாஸ் சூட்டிங் ஸ்பாட்டுக்கு வனத்துறை அதிகாரிகள் சென்றனர். பிக் பாஸ் படக்குழுவினரிடம், வர்த்தூர் சந்தோஷை விசாரணை நடத்த வேண்டும். அவரை வெளியே வர சொல்லுங்கள் என கேட்டுள்ளனர். படக் குழுவினர் விசாரணைக்காக சந்தோஷை அனுப்பினர். அவர் அணிந்திருந்த புலி நகத்தின் பதக்கத்தை சோதனை நடத்தினர். அது புலி நகம் தான் என்று உறுதி செய்தனர். இதனால் வனச் சட்டம் 1972 ன் கீழ் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் 3 ஆண்டுகளுக்கு முன் தமிழக எல்லையான ஒசூரில் ஒருவரிடம் 20 ஆயிரம் ரூபாய்க்கு புலி நகம் வாங்கியதாக தெரிவித்துள்ளார். மேலும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. வனச் சட்டம் கடுமையானது என்பதால் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.