‘கபசுரக் குடிநீர் வழங்குங்கள்’: கட்சியினருக்கு ஸ்டாலின் கட்டளை


சென்னை, ஏப். 19- கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட, தேர்தல் கமிஷன் அனுமதி அளித்துள்ளது.எனவே, கபசுரக் குடிநீர் வழங்கும் பணியில், கட்சியினருடன் வேட்பாளர்களும் இணைந்து செயல்பட வேண்டும்’ என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: கொரோனா இரண்டாவது அலை துவங்கியதும், மாநிலம் முழுதும் கட்சியினர், கபசுரக் குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தேர்தலில் போட்டி யிட்டோர், தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, இப்பணியில் ஈடுபட முடியாத நிலை இருந்தது. எனவே, ஆர்.எஸ்.பாரதி வாயிலாக, தேர்தல் கமிஷனிடம், தி.மு.க., சார்பில் அனுமதி கோரப்பட்டது.
அதை ஏற்று, கபசுரக் குடிநீர் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட, தேர்தல் கமிஷன் அனுமதி வழங்கி உள்ளது. எனவே, தி.மு.க., வேட்பாளர்களும், மாவட்ட செயலர்களும், கபசுரக் குடிநீர் வழங்கும் பணியில், முழு மூச்சாக ஈடுபட்டு, கொரோனா இரண்டாவது அலையிலிருந்து, மக்களை காப்பாற்ற வேண்டும். கபசுரக் குடிநீர் வழங்கும் போது, அந்நிகழ்ச்சி நடக்கும் இடம் உள்ளிட்ட விபரங்களை, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தெரிவித்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை, முறையாக கடைபிடிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.