கபில்தேவ் சாதனையை முறியடித்த பும்ரா

லண்டன் செப்.6-
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியின் இறுதி நாளான இன்று இந்திய அணி கிட்டத்தட்ட வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய பும்ரா, இரண்டாவது இன்னிங்சிலும் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
அதிலும் குறிப்பாக இங்கிலாந்து வீரர் போப் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 100 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் 25 போட்டிகளில் 100 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்து இருந்தார்.
அவரை தொடர்ந்து இர்பான் பதான் (28 போட்டிகள்), முகமது ஷமி (29 போட்டிகள்), ஸ்ரீநாத் (30 போட்டிகள்) என அடுத்தடுத்த இடத்தில் இருக்கின்றனர். இந்நிலயில் தற்போது 24-ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் பும்ரா இந்த சாதனையை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி சார்பாக விரைவாக 100 டெஸ்ட் விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனையை அஸ்வின் 18 போட்டிகளில் வைத்திருக்கிறார்.
இருப்பினும் வேகப்பந்து வீச்சாளராக இந்த சாதனையை பும்ரா நிகழ்த்தியுள்ளார். அவரது இந்த சாதனையை அடுத்து தற்போது பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மேலும் பிசிசிஐ தங்களது ட்விட்டர் பக்கத்தில் பும்ரா எடுத்த இந்த நூறாவது விக்கெட் குறித்த தகவலை பகிர்ந்து அவரை பாராட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.