
சவுதி: டிசம்பர் 31-
ஏமனில் உள்ள மீதமுள்ள படைகள் திரும்ப பெறப்படும் என்று ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் சார்பாக கப்பலில் அனுப்பி வைக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் போர் தளவாடங்கள் மீது சவுதி அரேபியா வான்வழித் தாக்குதலை நடத்திய நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் இப்படியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேற்காசிய நாடான ஏமனில் கடந்த 10 ஆண்டுகளாகவே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இப்போரில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி குழுவினரும், அரசு படைகளும் மோதி வருகின்றன. சவுதி அரேபியாவும், ஐக்கிய அரபு அமீரகமும் அரசு படைகளுக்கு ஆதரவாக உள்ளன. அதேபோல் அரசு படைகளுக்கு உள்ளேயே ‘தெற்கு இடைக்கால கவுன்சில்’ என்ற பிரிவினைவாதக் குழு உருவாகியது.
இவர்கள் தெற்கு ஏமனை தனி நாடாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தக் குழுவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் ஆதரவளித்து வருகிறது. தெற்கு இடைக்கால கவுன்சில் தலைமையிலான படைகளுக்கு, ஐக்கிய அரபு அமீரகம் தரப்பில் ஆயுதங்கள் மற்றும் போர் தளவாடங்களை அனுப்பி வைக்கப்பட்டது. அதனை கொண்டு வந்த கப்பல்கள் ஏமனின் முஹல்லா துறைமுகம் வெளியில் இருந்தன. இதனை சவுதி அரேபியா படைகள் குண்டுவீசி தாக்கி அழித்தது. அதன்பின் சவுதி அரேபியா தரப்பில், பொதுமக்களுக்கு பாதிப்பு வராத வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஐக்கிய அரபு அமீரகம் ஏமனுக்கு ஆயுதங்கள் அனுப்பிய குற்றச்சாட்டையும் மறுத்தது.இதன்பின் ஏமனின் அரசுப் படைகள் அவசர நிலையை அறிவித்தன.
















