கமல்நாத் மகன் நகுல்நாத் சொத்து மதிப்பு ரூ.697 கோடி

புதுடில்லி, மார்ச் 30-
மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்தின் மகன் நகுல் நாத். மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரே காங்கிரஸ் எம்.பி. இவர்தான். கடந்த மக்களவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 29 இடங்களில், 28 இடங்களில் பாஜக வென்றது. சிந்த்வாரா தொகுதியில் மட்டும் நகுல் நாத் வெற்றி ெற்றார்.
இந்த தேர்தலில் இவர் இதே தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். இவர் வேட்பு மனுவில், தனது சொத்து மதிப்பு ரூ.697 கோடி என தெரிவித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் இவரது சொத்து மதிப்பு ரூ.40 கோடி அதிகரித்துள்ளது. இவரது ஆண்டு வருமானம் கடந்த 2017-18-ம் ஆண்டில் ரூ.2.76 கோடியாக இருந்தது.
இது 2022-23-ம் ஆண்டில் ரூ.7.89 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 2019-20-ம் ஆண்டில் இவரது ஆண்டு வருமானம் அதிகபட்சமாக ரூ.11.6 கோடியாக உயர்ந்தது.நகுல்நாத், அவரது மனைவி பிரியா நாத் ஆகியோரின் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ.716 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் இது ரூ.660 கோடியாக இருந்தது.
இருவரின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.56.2 கோடி அதிகரித்துள்ளது. நகுல்நாத்தின் பெரும்பாலான சொத்துகள் பல நிறுவனங்களின் பங்குளாகவே உள்ளன. நகுல் நாத்திடம் 1.89 கிலோ தங்கம் உள்ளது. இவரது மனைவி ப்ரியா நாத்திடம் 850.6 கிராம் தங்கம் உள்ளது.