கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி பக்தர்கள் வழிபாடு

பவானி, பிப்.28-
பவானி செல்லியாண்டி அம்மன் கோவில் விழாவையொட்டி கம்பத்துக்கு பக்தர்கள் புனித நீர் ஊற்றி அம்மனை வழிபட்டனர். செல்லியாண்டி அம்மன் கோவில் பவானியில் பிரசித்தி பெற்ற செல்லியாண்டி அம்மன், மாரியம்மன், எல்லையம்மன் வகையறா கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களின் மாசி பொங்கல் மற்றும் தேர் திருவிழா கடந்த 14-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து கடந்த 21-ந் தேதி இரவு கோவிலில் கம்பம் நடப்பட்டது. அன்றில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி அம்மனை வழிபட்டு வருகிறார்கள்.
பின்னர் 22-ந் தேதி கோவிலில் கொடியேற்றப்பட்டது. கர்ப்ப கிரகத்தில்… இந்த நிலையில் கோவில் கா்ப்ப கிரகத்தில் உள்ள செல்லியாண்டி அம்மனுக்கு பால், இளநீர், திருமஞ்சனம் மற்றும் புனித நீர் ஊற்றி வழிபடும் நிகழ்ச்சி நேற்று நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கியது. இதில் ஈரோடு, சேலம், கோவை, நாமக்கல் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று கர்ப்ப கிரகத்துக்குள் சென்று அம்மனுக்கு பால், இளநீர்,
திருமஞ்சனம் மற்றும் புனிதநீர் ஊற்றி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சி இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 12 மணி வரை நடைபெறுகிறது.
சேறு பூசும் விழா விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சேறு பூசும் திருவிழா நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி பகல் 11 மணி அளவில் அம்மன் அழைப்பு நிகழ்ச்சி நடக்கிறது.
அப்போது குதிரையை அம்மனாக பாவித்து புதிய பஸ் நிலையம் அருகே உள்ள எல்லையம்மன் கோவிலில் இருந்து செல்லியாண்டி அம்மன் கோவில் வரை அம்மன் அழைப்பு நிகழ்ச்சி நடைபெறும்.
அம்மன் அழைப்பின் போது சாமிக்கு புனிதநீர் ஊற்றுவார்கள்.
அவ்வாறு அம்மனுக்கு ஊற்றப்படும் புனித நீரானது தரையில் விழும். தரையில் விழுந்த புனித நீருடன் கலந்த சேரை உடம்பு முழுவதும் பூசி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களுடைய உடலில் சேறு பூசி நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபடுவார்கள். இதையடுத்து மதியம் 2 மணிக்கு பொங்கல் விழா நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு பொங்கல் வைத்து படைத்து வழிபடுவர்.