கருசிதைப்பு விவகாரம் -மேலும் ஒரு செவிலியர் கைது

பெங்களூர் : டிசம்பர் . 4 – மாநிலத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கி சர்ச்சைகளுக்கு காரணமான பெங்களூர் உட்பட மூன்று மாவட்டங்களில் நடந்துள்ள கரு பாலினம் கண்டுபிடிப்பு மற்றும் பெண் சிசுக்கள் கொலைதொடர்பாக மற்றொரு செவிலியரை நகர போலீசார் கைது செய்துள்ளனர். மைசூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பணியாற்றிவந்த செவிலியர் உஷாராணி என்பவர் கைது செய்யப்பட்டிருப்பதுடன் இவருடைய கைதால் இந்த சம்பவத்தில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள உஷாராணி இந்த விவகாரத்தின் முக்கிய குற்றவாளியான டாக்டர் சந்தன் பல்லாளின் மருத்துவமனையில் செவிலியராக இருந்துள்ளார். இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்த பின்னர் உஷாராணி தன் வேலையை விட்டு மைசூரில் மற்றொரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்து கொண்டார். உஷாராணி இந்த விவகாரத்தின் மற்றொரு குற்றவாளி புட்டராஜு என்பவரின் உறவினர் என்பதுடன் மூன்று நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட மற்றொரு செவிலியர் கொடுத்த தகவலின் பேரில் தற்போது உஷாராணி கைது செய்யப்பட்டுள்ளார். புட்டராஜுவின் உத்தரவுப்படி உஷாராணி பெண் சிசுக்களை கருச்சிதைவு செய்து வந்துள்ளார். தவிர கருச்சிதைவுக்கு போலி ஆவணங்களையும் தயாரித்து கொடுத்துள்ளாள் . பையப்பனஹள்ளி போலீசார் புட்டராஜூவை கைது செய்து விசாரித்ததில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது புட்டராஜு ஜாமீன் பெற்றுள்ள நிலையில் உஷாராணியிடம் விசாரணை நடந்து வருகிறது. மாநில கர்ப சட்ட விதிப்படி பாலினம் குறித்து சோதிக்காமல் கணவன் மனைவி இருவரின் ஒப்புதலுடன் மனைவிக்கு தீவிர உடல் ஆரோக்ய பிரச்சனை இருக்கும் நேரத்தில் மட்டுமே மருத்துவ ஸ்கன்னிங்க் மற்றும் மருத்துவ அறிக்கையுடன் கருச்சிதைவு நடத்தப்படவேண்டும். இவை அனைத்தும் கரப்பம் தரித்த 24 வாரங்களுக்கு உள்ளாக நடக்க வேண்டும். பின்னர் இவை குறித்து முழு விவரங்களையும் குடும்ப நலத்துறைக்கு விளக்கம் அளிக்க வேண்டும். தவிர மருத்துவமனையில் இரண்டு ஆண்டுகளில் நடத்தப்பட்ட கருச்சிதைவு குறித்த முழு விவரங்களும் பதிவில் இருக்க வேண்டும். உஷாராணி பணியாற்றிய தனியார் மருத்துவமனையில் இந்த முறைகள் பின்பற்றப்பட்டுள்ளன. இதை அறிந்த உஷாராணி மருத்துவமனை உரிமையாளர் மற்றும் மருத்துவரின் கவனத்திற்கும் வராத வகையில் போலி ஆவணங்களை தயாரித்து கருச்சிதைவுகள் நடத்தியுள்ளார். பின்னர் மருத்துவர்களுக்கு பொய் தகவல்களை அளித்துவந்துள்ளார். இந்த நிலையில் பையப்பனஹள்ளி போலீசார் உஷாராணியை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். தவிர உஷாராணி போலி ஆவணங்களை தயாரித்தது எப்படி என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.