கருணாநிதி பிறந்தநாள் நூற்றாண்டு விழா நினைவு நாணயம்

புதுடெல்லி: அக். 13
தமிழக முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான மறைந்த கருணாநிதியின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா தமிழக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, நினைவு நாணயம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான கோரிக்கையை மத்திய நிதி அமைச்சகம் பரிசீலித்து ஒப்புதல் அளிக்கிறது. பிறகு இந்திய ரிசர்வ் வங்கி அந்த நாணயத்தை அச்சிடுகிறது.
இந்நிலையில் ரூ.100 மதிப்பில் நினைவு நாணயம் வெளியிடும்படி தமிழக அரசு விடுத்த கோரிக்கைக்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. நாணயத்தை வடிவமைக்கும் பணி தற்போது நிதி அமைச்சகத்தால் நடைபெற்று வருகிறது.
நாணயத்தின் ஒருபுறத்தில் கருணாநிதியின் சிரித்த முகத்துடன், ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் எம்.கருணாநிதி பிறந்த நாள் நூற்றாண்டு 1924 – 2024’ என ஆங்கிலத்திலும் இந்தியிலும் உள்ளது. மறுபுறத்தில் தேசிய நினைவுச் சின்னத்துடன் ரூ.100 என மதிப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்தியா என ஆங்கிலத்திலும், பாரத் என இந்தியிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த உத்தேச வடிவத்தில் தேவைப்படும் மாற்றங்களை மத்திய நிதியமைச்சகமே செய்யும். இப்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, நினைவு நாணயத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நினைவு நாணயம் பொதுப்புழக்கத்தில் விடப்படுமா அல்லது தனிப்பட்ட பயன்பாட்டுக்கா என்பது இன்னும் தெரியவில்லை.