கருத்து கேட்கிறது மத்திய அரசு

புதுடெல்லி ஜூன் 29:: நடப்பாண்டுக்கான நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது அண்மையில் வெளிச்சத்துக்கு வந்தது.இதையடுத்து, அந்த தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நிர்வாகத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்தநிலையில், என்டிஏ-வில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்துமாணவர்கள், பெற்றோர்களது கருத்துகளையும், ஆலோசனைகளையும் வரவேற்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வினாத் தாள் கசிவு, கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டது தொடர்பான பல்வேறு முறைகேடுகள் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இந்த தேர்வை எதிர்த்து பல மாநிலங்களில் மாணவர் மற்றும் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்வின் புனிதத் தன்மையை கருத்தில் கொண்டு தேசிய தேர்வு முகமையில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பாக ஆலோசனைகளை வழங்க இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது.
தற்போது இந்த குழு, என்டிஏவில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் தங்களது பரிந்துரைகளை வழங்கலாம் என்று தெரிவித்துள்ளது. அதேபோன்று, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களை தகுதியின் அடிப்படையில் நியமிக்க உதவும் யூஜிசி-நெட் தேர்வு குறித்தும் அவர்கள் தங்களது ஆலோசனைகளை வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்களது பரிந்துரைகளை இதற்காக உருவாக்கப்பட்ட சிறப்பு இணையதள முகவரியான https://innovateindia.mygov.in/examination-reforms-nta/ வில் ஜூலை 7-ம் தேதி வரை தெரிவிக்கலாம் என்று அந்த குழு அறிவித்துள்ளது.