கருத்து வேறுபாடுகளை மறந்து கட்சிக்காக உழைக்க வேண்டும்: கார்கே

ஹைதராபாத், செப்.17-
தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள், சுயநலன்களை ஒதுக்கி வைத்துவிட்டு, கட்சியின் வெற்றிக்காக அயராது உழைக்க வேண்டும் என்று கட்சித் தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கர்நாடக சட்டசபை தேர்தல் வெற்றியை குறிப்பிட்டு பேசிய அவர், ஒற்றுமையுடனும், ஒழுக்கத்துடனும் செயல்பட்டால் மட்டுமே கட்சியால் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்ய முடியும் என்றார்.


ஹைதராபாத்தில் இரண்டாவது நாளாக நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் அவர் பேசினார். அப்போது அவர் கூறும் போது கட்சி உறுப்பினர்கள் சுய ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் மற்றும் கட்சியின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த கருத்தையும் வெளியிடக்கூடாது. சொந்தக் கட்சித் தலைவர்களுக்கு எதிராக ஊடகங்களில் கருத்து வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்
ஒற்றுமைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, தனிமனித நலன்களை ஒதுக்கி, அயராது உழைக்க வேண்டும்.தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி, கட்சியின் வெற்றிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.சுய கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்றார்.
அமைப்பு ரீதியாக நாமும் வலுப்பெற வேண்டும். ஒற்றுமை மிகவும் முக்கியம்.ஒற்றுமை மற்றும் ஒழுக்கத்தால் மட்டுமே எதிரிகளை தோற்கடிக்க முடியும். கர்நாடகாவில் ஒற்றுமையாக இருந்து, ஒழுக்கத்துடன் போராடி வெற்றி கண்டோம் என்பது தெரிகிறது.
காங்கிரஸுக்கு முன் சவால்கள் இருப்பதாகவும், இந்த சவால்கள் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல, இந்திய ஜனநாயகம் மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதற்கும் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.