கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

ஓசூர்: நவ.9-
ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,270 கன அடியாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, தென் பெண்ணை ஆற்றுக் கரையோரப் பகுதி மக்களுக்கு ஒலி பெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதை தொடர்ந்து, தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 562 கன அடியாக இருந்த நீர் வரத்து, நேற்று காலை 2,270 கன அடியாக அதிகரித்தது. அணையிலிருந்து அதே அளவு நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், தென் பெண்ணை ஆற்றில் நீர் ஆர்ப்பரித்துச் செல்கிறது.
இதையடுத்து, தென் பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள சித்தனப்பள்ளி, தட்டகானப் பள்ளி, கெலவரப் பள்ளி, சின்ன கொள்ளு, பெரிய கொள்ளு, முத்தாலி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட தென் பெண்ணை ஆற்றுக் கரையோர மக்களுக்குல் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேஷ் தலைமையிலான வருவாய்த் துறை ஊழியர்கள் ஒலி பெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர்.
இதனிடையே, பெங்களூரு மற்றும் அதன் புறநகர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளிலிருந்து ரசாயன கழிவுகள் மற்றும் சாக்கடை கழிவு நீர் தென் பெண்ணை ஆற்றில் நேரடியாகல் கலப்பதால், கெலவரப் பள்ளி அணை நீர் மாசடைந்து, துர்நாற்றம் வீசி வருகிறது. தற்போதும் அதே நிலை நீடிப்ப தால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.