கர்நாடகத்தின் 3 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

பெங்களூரு, ஆக. 4: கர்நாடகத்தின் 3 மாவட்டங்களுக்கு ஆக. 5 ஆம் தேதி வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாநிலம் முழுவதும் பருவமழை தீவிரம் குறைந்துள்ளது. மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சி நிலவி வருகிறது. இருப்பினும் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆக. 5 ஆம் தேதி வரை 3 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தட்சிண கன்னடா, உடுப்பி மற்றும் உத்தர கன்னடா ஆகிய 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மஞ்சள் எச்சரிக்கை ஆக. 5ம் தேதி வரை நீடிப்பதால் இந்த மாவட்டங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஆனால், மாநிலத்தில் பருவமழையின் தாக்கம் குறைந்துள்ளது. மாநிலத்தில் நாளுக்கு நாள் மழை வலுவிழந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, பெங்களூரு சிட்டி, பெங்களூரு ஊரகம், கோலார், சிக்கபள்ளாப்பூர், ஹாசன், தும்கூர், மைசூரு, தாவண‌கரே போன்ற மாவட்டங்களில் மழை குறைந்துள்ளது. கலபுர்கி, யாதகிரி, சிக்கோடி, பெலகாம், பீதர், ராய்ச்சூர் ஆகிய மாவட்டங்களிலும் மழை குறைந்து வறண்ட வானிலையே நீடிக்கிறது. ஜூன் மாதத்தில் இயல்பை விட 56 சதவீதம் குறைவாக பெய்த கடலோரம், மலைநாடு உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழையில்லாத நிலை ஏற்பட்டது. ஆனால் ஜூலை மாதத்தில் கனமழை பெய்து வழக்கத்தை விட 29 சதம் கூடுதலாக பெய்துள்ளது.