கர்நாடகத்திற்கு உத்தரவு

புதுடெல்லி/ பெங்களூரு: நவ. 24-தமிழகத்துக்கு காவிரியில் டிச‌ம்பர் மாத இறுதி வரை விநாடிக்கு 2,700 கனஅடி நீர் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது.
கடந்த அக்.30-ம் தேதி நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில், நவ.22-ம் தேதி வரை தமிழகத்துக்கு விநாடிக்கு 2,600 கனஅடி நீர் திறக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக அரசு, இதை மறுபரிசீலனை செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தது. இருப்பினும், தமிழகத்துக்கு விநாடிக்கு சுமார் 3,000 கனஅடி நீரை திறந்துவிட்டது.
இந்நிலையில், காவிரி ஒழுங்காற்று குழுவின் 90-வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது. காணொலி மூலமாக நடந்த இந்த கூட்டத்தில் குழுவின் செயலர் டி.டி.ஷர்மா, உறுப்பினர் கோபால் ராய், தமிழக அரசு சார்பில் காவிரி தொழில்நுட்ப குழுதலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் பங்கேற்றனர். கர்நாடகா, கேரளா,புதுச்சேரி மாநில நீர்வளத் துறை அதிகாரிகள், வானிலை ஆய்வு மைய நிபுணர்களும் காணொலி வாயிலாக கலந்துகொண்டனர்.
இதைத் தொடர்ந்து பேசிய காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் வினீத் குப்தா, ‘‘தமிழகத்தின் விவசாய தேவைக்காக கர்நாடக அரசு கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து டிசம்பர் மாத இறுதிவரை விநாடிக்கு 2,700 கன அடி நீரை திறந்துவிட வேண்டும். அதாவது, நவ.23-ம் தேதி (நேற்று) முதல் பிலிகுண்டுலு சோதனை நிலையத்தில் விநாடிக்கு 2,700 கன அடி நீர் தமிழகத்துக்கு செல்வதை உறுதி செய்ய வேண்டும்’’ என்று பரிந்துரை செய்தார்.
இதற்கு கர்நாடக விவசாய அமைப்பினரும், கன்னட அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாஜக, மஜத ஆகிய கட்சியினர் காவிரி நீரை தமிழகத்துக்கு திறக்க கூடாது என வலியுறுத்தியுள்ளனர்.