கர்நாடகத்திற்கு தேவையான உதவி: மோடி

பெங்களூரு, நவ. 23- மழையால் பாதிக்கப்பட்டுள்ள கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையுடன், தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் ஆலோசனை நடத்தினார். அப்போது, மாநிலத்திற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என மோடி உறுதி அளித்ததாக பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பை மீறி பெய்துள்ளது. வரலாறு காணாத அளவுக்கு பெய்த மழையால், ஏரி, குளம், கட்டை, ஓடைகள் என நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால், பல பகுதிகளில் கடும் பாதிப்புக்குள்ளானது. தலைநகர் பெங்களூருவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதனையடுத்து தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு துறையினர் ரப்பர் படகுகள், டிராக்டர்கள் வாயிலாக குடிநீர், பிஸ்கட் , பன், வாழைப்பழம், மெழுகுவர்த்தி, பால் ஆகியவற்றை வழங்கினர். மீட்பு பணியிலும் ஈடுபட்டனர். பெங்களூரு, கோலார், சிக்பல்லாபூர், ராமநகர், துமகுரு உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவிகளை முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
இதனிடையே, பசவராஜ் பொம்மையை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள மழை மற்றும் வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.இது தொடர்பாக பசவராஜ் பொம்மை கூறியதாவது:
மழை மற்றும் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த பிரதமர், பயிர் பாதிப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளார். மத்திய அரசு தேவையான உதவிகளை வழங்கும் எனவும் உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தார்.
முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று மழையால் வெள்ளக்காடாகியுள்ள எலஹங்காவின் பல பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு மழையால் நேர்ந்துள்ள இன்னல்களை பார்வையிட்டு இத்தகைய தொந்தரவுகளை தவிர்க்க நிரந்தர திட்டங்களை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இன்று காலையே முதல்வர் மழையால் முழுதும் வெள்ளம் புகுந்து பெரிதும் பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ள எலஹங்கா கேந்திரிய விஹார் குடியிருப்புகளுக்கு சென்றுபார்வையிட்டார் . இந்த குடியிருப்புகளுக்குள் முதல்வர் நடந்து போகவும் முடியாமல் நீரிலேயே ஜீப்பில் அப்பகுதி எம் எல் ஏ விஸ்வநாத்துடன் சென்று நிலைமைகளை கேட்டறிந்தார். கட்டிடங்களின் நிலைமை , மழைநீர் கால்வாயின் நிலைமை என அனைத்தையும் பரிசீலித்து மழை முழுதும் நின்ற பின்னர் கால்வாயை அகலப்படுத்தும் பணி மேற்கொண்டு நிரந்தர தீர்வு காணுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதே நேரத்தில் செய்தியாளர்களிடம் முதல்வர் பேசுகையில் கடந்த சிலநாட்களாக இந்த பகுதியில் அதிகளவு மழை பெய்துள்ளது . எலஹங்கா ஏரிக்கு 11 ஏரிகளின் தண்ணீர் வந்து சேர்கிறது. ஏரியிலிருந்து நீர் வெளியேறும் கால்வாய் குறுகலாக உள்ளது. இதனால் தொல்லைகள் உண்டாகிறது. கால்வாய் ஆக்ரமிப்பு குறித்து எனக்கு தகவல் வந்துள்ளது. மழை நின்ற பின்னர் இந்த கால்வாயை அகலப்படுத்துமாறு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன் . இப்பகுதியில் மழையால் 40 வீடுகளும் பைட்டராயணபுராவில் 60 வீடுகளும் சேதமடைந்துள்ளன. 20 கிலோ மீட்டர் சாலைகள் பழுதாகியுள்ளன. வீடுகளில் நீர் நிறைந்தவர்களுக்கு உடனே 10 ஆயிரம் ருபாய் நிவாரணம் அளிக்குமாறு கூறியுள்ளேன். வீடுகள் சேதமடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ருபாய் நிவாரணம் தரப்படும். கால்வாயின் நீளத்தை 50 கிலோ மீட்டருக்கு அதிகரிக்கப்படும். கால்வாயை ஆக்ரமித்து பப்பர் பகுதியில் வீடு கட்டியுள்ளவர்களுக்கு நோட்டீஸ் அளித்து அனைத்தையும் அப்புறப்படுத்துவோம். மழை நின்ற பின்னர் நிவாரண பணிகள் துவங்கும் என முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.