கர்நாடகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு பலத்த காற்றுடன் கனமழை

பெங்களூர் : மே. 16 – மாநில தலைநகர் பெங்களூர் உட்பட பல பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. தவிர இன்று முதல் அடுத்த ஐந்து நாட்கள் மாநிலத்தின் பல பகுதிகளிலும் அதிக மழைக்கான வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாநிலத்தில் பரவலாக அதிக மழை பெய்யும் நிலை இருப்பதால் மாநிலத்தின் தெற்கு உள் பகுதிகள் , வடக்கு உள்பகுதிகள், மற்றும் கடலோர மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெங்களூர் நகரில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் இருந்ததுடன் , இதனால் நகரம் சற்றே குளிர்ச்சியடைந்துள்ளது. ஆனாலும் அடுத்த ஐந்து நாட்களுக்கு மின்னல் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் காற்று மழை மின்னல் மற்றும் இடிகளின் போது மரங்களின் கீழே மற்றும் வேறு பல ஆபத்தான இடங்களில் தஞ்சம் அடைய வேண்டாம் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.