கர்நாடகத்தில் அரிசி விலை 20 சதவிகிதம் உயர்வு

பெங்களூர் : ஆகஸ்ட். 21 – மாநிலத்தில் மழையின் குறைபாடால் தென் இந்திய உணவு பொருள்களில் மிக முக்கியமானதாக கருதப்படும் அரிசி விலைகள் தற்போது 20 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக விவசாயிகள் மற்றும் வர்த்தக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஒன்றரை மாதங்களாக தேவைக்கேற்ப அரசி சந்தைக்கு வராத நிலையில் இதன் விலை தற்போது 15 முதல் 20 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இது குறித்து யஷ்வந்த்பூரில் உள்ள ஏ பி எம் சி மார்க்கெட்டில் உள்ள வியாபாரி ஒருவர் கூறுகையில் கடந்த ஜூன் மாதத்தில் கிலோ 45 முதல் 48 ரூபாய்க்கு விற்றுவந்த சோனா மசூரி அரிசி தற்போது 55 முதல் 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதே போல் இட்லி அரிசி முன்னர் 28 முதல் 30 ரூபாய்க்கு விற்றுவந்தது தற்போது கிலோ 35 ரூபாயாக உயர்ந்துள்ளது. தவிர ஸ்டீம் அரிசி முன்னர் இருந்த 38 ரூபாய்க்கு பதிலாக தற்போது 50 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது. தவிர இதுவே சில்லறை கடைகளில் மேலும் 10 முதல் 15 சதவிகிதம் வரை அதிகரிக்கலாம். கடந்த ஜூலை மாதம் விலைகள் உறைந்த அரிசி மீண்டும் இம்மாதம் மேலும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு அதிக மழையால் பாதிப்புக்குள்ளான நெற்பயிர்கள் இந்தாண்டு மாநிலத்தில் நிலவும் குறைந்த மழையால் 40 சதவிகித விதைப்பு பணிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. தவிர நெற்பயிரை விதைத்த விவசாயிகள் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மழைக்காக காத்திருக்கின்றனர். அடுத்த 10 நாட்கள் நெற்பயிர்களுக்கு மிக முக்கிய கட்டமாகும். அப்படி இந்த கால கட்டத்தில் போதிய மழை பெய்யவில்லை என்றால் அரிசி விலைகள் மேலும் உயர வாய்ப்புகள் உள்ளது. ஒரு கிலோ அரிசியை வளர்த்து அறுவடை செய்ய குறைந்தது 2500 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. என்றார். இதே வேளையில் மாநில விவசாயிகள் சங்க தலைவர் குருபூர் ஷாந்தகுமார் கூறுகையில் எனக்கு இரண்டு ஏக்கர் நெல் பூமி உள்ளது. ஆனால் இந்த ஆண்டு தண்ணீர் குறைபாடால் நெற்பயிரை விளைவிக்க வில்லை. மாநிலத்தின் நெல் விளையும் பகுதிகளான கே ஆர் எஸ் , மைசூர் , மண்டியா ஹாசன் மற்றும் சாமராஜபேட் ஆகிய பகுதிகளில் போதிய மழை இல்லதாதால் நீர் குறைபாடு நிலவிவருவதால் விவசாயிகள் மழைக்காக வழி மேல் விழி வைத்து காத்திருக்கின்றனர். நெற்பயிர்கள் விளைவிக்க குறைந்தது மூன்று மாதங்கள் தொடர்ந்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தாவணகெரே பகுதியில் அணையிலிருந்து அதிகாரிகள் நீர் திறந்திருப்பினும் தினசரி தேவைக்கேற்ப தண்ணீர் கிடைக்க வில்லை. இதனால் இந்த பகுதி விவசாயிகள் தங்கள் சொந்த ஊர்களை விட்டு கட்டிட பணிகள் செய்து பிழைக்க பல நகரங்களை நோக்கி இடம் பெயர்ந்து வருகின்றனர். என்றார்.