கர்நாடகத்தில் கிராமப்புறங்களில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க நிதி

பெங்களூரு, பிப். 21- கர்நாடகத்தில் கிராமப்புறங்களில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். கர்நாடக சட்டசபையில் நேற்று கவா்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நடைபெற்ற விவாதத்திற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பதிலளிக்கையில் கூறியதாவது:- குடிநீர் இணைப்பு கிராமப்புறங்களில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கினால் அவர்களின் உடல் சுகாதாரம் பாதுகாக்கப்படும். பிற்படுத்தப்பட்ட பிரிவுகளை சேர்ந்த 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு விடுதி வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 30 ஆயிரம் பேருக்கு விடுதிகள் கட்டி கொடுக்க ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தலித் மற்றும் பழங்குடியின சமூகங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கூடுதல் விடுதி வசதிகளை ஏற்படுத்த மாநிலத்தின் 5 இடங்களில் மெகா விடுதி கட்டிடங்களை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சமூகங்களை சோ்ந்த மக்களை முன்னிலைக்கு கொண்டுவர பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறோம்.
பணி இடைநீக்கம் வணிகம் மற்றும் கலை கல்லூரிகளில் அறிவியல் பாடப்பிரிவுகளை தொடங்க ரூ.200 கோடி நிதி ஒதுக்கியுள்ளோம். கலை கல்லூரிகளில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். அறிவியல் ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படும். பி.யூ.கல்லூரி மற்றும் டிகிரி கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எங்கள் அரசு கல்வித்துறைக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. வணிக வரித்துறையில் வரியை சரியாக வசூலிக்க நடவடிக்கை எடுக்காமல் தவறு செய்த 25 அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்தோம். இதனால் வரி வசூல் அதிகரித்தது. அதிகாரிகள் அதிகளவில் முயற்சி செய்து வரி வசூலை அதிகரித்தனர். கொரோனா காலத்தில் ஜி.எஸ்.டி. இழப்பீடாக மத்திய அரசு கர்நாடகத்திற்கு ரூ.30 ஆயிரம் கோடி வழங்கியது. 50 ஆயிரம் விவசாயிகளுக்கு தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்ய வசதிகளை செய்து கொடுத்துள்ளோம். இவ்வாறுபசவராஜ் பொம்மை கூறினார்.