கர்நாடகத்தில் குடிநீர் தட்டுப்பாடு

பெங்களூர், ஆக. 23- கர்நாடக மாநிலத்தில் பல மாவட்டங்களில் பருவ மழை பொழிய தவறி உள்ளது. 70 சதவீதம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் பல கிராமங்களில் குடிநீர் தேவைக்காக போர்வெல்கள் ஏற்படுத்தப்படும் என்று தீர்மானித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் மழைபெய்ய தவறியதால் பெங்களூர் உட்பட பல மாவட்டங்களில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும். நிலத்தடி நீர் அளவும் குறைந்துள்ளது. இதுகுறித்து முதல்வர் சித்தராமையா தலைமையில் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவையான இடங்களில் போர்வெல்கள் ஏற்படுத்த வேண்டும்.
குடிநீர் சப்ளை செய்வதில் தனக்கு எந்த புகாரும் வராத அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார். அப்போது ஊரக வளர்ச்சித்துறை, மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா கூறுகையில், 121 கிராமங்களில் டேங்கர்கள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. 39 தாலுகாகளில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே தட்டுப்பாட்டை போக்க 86 கோடி ரூபாய் வழங்க முதல்வரிடம் கேட்டிருக்கிறோம். நிலைமை மிக மோசமான இருந்து வருகிறது.
இன்னும் 15 நாட்களுக்கு மழை இல்லை எனவே இதனை சமாளிக்க வேண்டும். பல நீர்த் தேக்கங்களில் விஷத் தன்மை ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டு வருவதை முதல்வர் சித்தராமையா, மாவட்ட பஞ்சாயத்து தலைமை அதிகாரிகளை எச்சரித்தார். மாநிலம் முழுவதும் உள்ள குடிசைப்பகுதிகளில் கழிவுநீர் பைப்புகள், குடிநீர் குழாய்கள் தனித் தனியாக இருக்க வேண்டும். அவைகளினால் பாதிப்பு ஏற்பட்டால், மாவட்ட பஞ்சாயத்து தலைமை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யப் படும் என்றும் எச்சரித்தார். மாநிலத்தில் விஷத் தன்மை கொண்ட தண்ணீரை பயன்படுத்தியதால் 13, 14 பேர் பலியானார்கள்.
சித்ரதுர்கா மாவட்டத்தில் மட்டும் 7 பேர் பலியானார்கள். ஆர்.டி.பி.ஆர்., துறைக்கும், சுகாதாரம் மற்றும் நகர மேம்பாட்டுத்துறையும் ஒன்றோடு ஒன்று இணைந்து பணியாற்ற ஒத்துழைப்பு இல்லாததால் இதன் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.