கர்நாடகத்தில் கைதான 3 பேரிடம் என்ஐஏ அதிரடி விசாரணை

பெங்களூரு, மார்ச் 6: பெங்களூரு, தட்சிண கன்னடா, உத்தர கன்னடா மாவட்டங்களின் சில பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தி 3 பேரை கைது செய்தனர்.
சோதனையில் பெங்களூருவை வசித்து வரும், கேரளா மாநிலம் இடுக்கியை சேர்ந்த சையத் கைல், கல்மட்கா கிராமத்தை சேர்ந்த பிஜூ ஆபிரகாம் மற்றும் சுள்யா தாலுகா அத்தாவர் கிராமத்தை சேர்ந்த நபித் ஆகியோரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தவிர, உத்தர கன்னடா மாவட்டம் அங்கோலாவில் நசீர்கான் என்பவரை அதிகாரிகள் தேடி வருகின்றனர். மேலும் 2 குழுக்களாக பிரிந்து மங்களூரு மற்றும் அங்கோலாவுக்குச் சென்று குற்றம் சாட்டப்பட்டவர் குறித்த கூடுதல் ஆவணங்களை சேகரித்து வருகின்ற‌னர்.
கர்நாடகம், தமிழ்நாடு, தெலுங்கானா, பஞ்சாப், குஜராத் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். 25 மொபைல் போன்கள், 6 மடிக்கணினிகள் மற்றும் 4 ஹார்டு டிஸ்க்குகள், பல்வேறு ஆவணங்கள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டது. பெங்களூரு சிறையில் உள்ள கைதிகள் தீவிரவாதம் உள்ளிட்ட வன்முறைச் செயல்களில் ஈடுபட சதி செய்ததாகவும், தற்கொலைப்படை தாக்குதல்களைத் தூண்டுவதாகவும் தகவல் கிடைத்ததை அடுத்து என்ஐஏ சோதனை நடத்தியது. நேற்று காலை 6 மணி வரை பரப்பன அக்ரஹாராவில் என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு செய்து நசீர் உள்பட பலரிடம் விசாரணை நடத்தினர். தீவிரவாதி என சந்தேகிக்கப்படும் ஜுனைத், அவரது கூட்டாளிகள் 5 பேர் மீதும் 2017-ம் ஆண்டு தொழிலதிபரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. 2008ல், பெங்களூரு தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டி.நசீர், பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த ஜுனைத் அகமதுவுடன் தொடர்பு கொண்டார். பின்னர், ஜுனைத் தனது 5 கூட்டாளிகளையும் மூளைச் சலவை செய்து தீவிரவாதத்திற்குத் தூண்டினார். சிறையில் இருந்து வெளியே வந்த ஜுனைத், நசீரின் உத்தரவின் பேரில் பயங்கரவாத நடவடிக்கைகளை தொடங்கினார். அவர் தனது தோழர்களுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை சிலர் மூலம் சப்ளை செய்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சிசிபி போலீசார் 5 பேரை கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான ஜுனைத் வெளிநாட்டில் பதுங்கி உள்ளார். சிசிபி போலீசார் நசீரையும் கைது செய்துள்ளனர். இந்த இரண்டு வழக்குகளையும் சிசிபி போலீசார் என்ஐஏவிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த நிலையில் தற்போது என்ஐஏ இந்த வழக்கை விசாரித்து வருகிறது.