கர்நாடகத்தில் டெங்கு பரிசோதனை கட்டணம் நிர்ணயித்த அரசு

பெங்களூரு, ஜூன் 3-
கர்நாடக மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் கணிசமாக அதிகரித்து வரும் பின்னணியில் டெங்கு பரிசோதனைக்கான கட்டணம் நிர்ணயம் செய்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இரண்டு வகையான சோதனைகளுக்கு மொத்தம் ரூ.600 விலை நிர்ணயிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.என்.எஸ்.1 மற்றும் ஐஜிஎம் சோதனைக்கு தலா ரூ.300 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைகள் மற்றும் லேப் ரோட்டரிகளில் டெங்கு பரிசோதனைக்கு ரூ.600க்கு மேல் கட்டணம் வசூலிக்க முடியாது.
டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சிஇஓக்கள் ஆகியோருடன் நாளை காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.
டெங்கு ஏடிஸ் கொசுவை அழிக்கும் நடவடிக்கையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட பஞ்சாயத்து சிஇஓக்கள், நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் முக்கிய கூட்டத்தை கூட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்.
மேலும், மழைக்காலத்தில் அதிகமாக வரும் டெங்கு காய்ச்சலால் சிகிச்சை செலவு பொதுமக்களுக்கு சுமையாக மாறுவதை தடுக்க சுகாதாரத்துறை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது