கர்நாடகத்தில் மீண்டும் பிஜேபி ஆட்சியை பிடிக்க முக்கிய ஆலோசனை

பெங்களூர் : ஜூலை . 15 – எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க பின்பற்றவேண்டிய செயல் திட்டங்கள் குறித்து பி ஜே பி மற்றும் சங்க பரிவார் தலைவர்கள் நாள் முழுக்க இன்று சிந்தனா -மந்தனா கூட்டத்தை நடத்தியுள்ளனர் . தேவனஹள்ளி அருகில் நந்தி மலை அடிவாரத்தில் உள்ள பிரபல தனியார் ரிசார்ட்டில் பி ஜே பியின் தேசிய ஒருங்கிணைப்பு செயலாளர் பி எல் சந்தோஷ் தலைமையில் மாநில பி ஜே பியின் இந்த முக்கிய ஆலோசனை கூட்டம் இன்று காலை துவங்கியது . இந்த கூட்டத்தில் மாநில பி ஜே பி பொறுப்பாளர் அருண்சிங்க் , ஆர் எஸ் எஸ்ஸை சேர்ந்த பிரமுகரான முகுந்த் ஜி திப்பேஸ்வாமி , மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை , முன்னாள் முதல்வர் எடியூரப்பா , கட்சியின் மாநில தலைவர் நளீன் குமார் கட்டீல், தேசிய பொது செயலாளர் சி டி ரவி , உட்பட கோர் கமிட்டி உறுப்பினர்கள் , முக்கிய பிரமுகர்கள் பங்கு கொண்டுள்ளனர் . அடுத்த தேர்தலில் வெற்றிபெற எவ்வித செயல் திட்டங்களை வகுக்க வேண்டும் , தேர்தலுக்கு இப்போதிலிருந்தே  எவ்வித தயாரிப்புகள் நடக்க வேண்டும் , போன்ற செயல் திட்டங்களை வைத்து கொண்டு இந்த கூட்டம் நடந்து வருகிறது. மூன்று கட்டங்களாக இந்த கூட்டம் நடந்து வரும் நிலையில் முதல் கட்டத்தில் கோர் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கட்சி மற்றும் ஆட்சிக்கு இடையேயான ஒருங்கிணைப்பு , அரசின் செயல்பாட்டைவேகப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் , மத்திய மற்றும் மாநில அரசுகளின் மக்கள் ஆதரவு திட்டங்களை ஒவ்வொரு வீட்டிற்கும் சென்றடைய மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் , தவிர எதிர்வரும் தேர்தலுக்கு கட்சியை  ஒருங்கிணைப்பது உட்பட தற்போதைய அரசியல் நிலைமைகள் அனைத்து குறித்தும் இந்த கூட்டத்தில் சர்ச்சைகள் மற்றும் ஆலோசனைகள் நடந்து வருகிறது.