கர்நாடகத்தில் மேலும் 4 நாள் கனமழை

பெங்களூர்: ஜூலை. 11 – கடந்த பலநாட்களாக கடலோர, மலைநாடு மற்றும் மேற்கு பகுதி மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழை தீவிரமடைந்துள்ள நிலையில் இது போதாதென்று வங்காள பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதால் அடுத்த நான்கு நாட்களுக்கு பலத்த மழைக்கான வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கடலோர பகுதிகளில் சிவப்பு எச்சரிக்கை  தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் நிலையில் வட கர்நாடகத்தின் ஐந்து மாவட்டங்களில் ஆரெஞ்ச் எச்சரிக்கை மற்றும் ஆறு மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநில தலைநகர் பெங்களுரில் மேகம் சூழ்ந்த வானிலை இனியும் தொடர இருப்பதுடன் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளது. சில இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது. உடுப்பி மாவட்டத்தில் மழை சற்று குறைந்திருக்கும் நிலையில் நேற்று இரவு முதல் இந்த மாவட்டத்தில் மழை மிகவும் குறைந்துள்ளது. ஆனால் இன்றும் மழை இந்த மாவட்டத்தில் தொடரும் . இந்த நிலையில் உடுப்பி மாவட்டத்தில் இன்று பள்ளிக்கூடங்களுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது . ஆனால் கல்லூரிகள் வழக்கம் போல் நடந்தன என மாவட்ட ஆட்சியர் கூர்மராவ் தெரிவித்தார். தக்ஷிண கன்னடா மாவட்டத்திலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. அபாய நிலையில் இருந்த குன்றின் மற்றொரு பகுதி சரிந்துள்ள சம்பவம் பண்ட்யாளா தாலூகாவின் பஞ்சிக்கல்லு அருகில் நடந்துள்ளது. கழனியின் உரிமையாளர் ஒருவர் வீட்டின் மீது நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த குன்றின் மற்றொரு பகுதியும் பலவீனமடைந்து பின்னர் அது அடுத்த பகுதியில் சரிந்துள்ளது . இதனால் பலரும் பெரும் ஆதங்கத்தில் இருந்தனர். மங்களூரின் அத்தியபாடி முகேறு ஒட்டு மொத்தமாக  வெள்ள நீரில் மிதப்பதுடன் இதன் தடுப்பு சுவர்கள் நொறுங்கி வீழ்ந்துள்ளன . கடலோரத்தில் கடலின் அலைகள் பெருக்கெடுத்து பாய்வதால் கடலுக்குள் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.