கர்நாடகத்தில் ரூ.20.85 கோடி ரொக்கம், ரூ.27 கோடி மதுபானங்கள் பறிமுதல்

பெங்களூரு, மார்ச் 30: மாநிலத்தில் இதுவரை ரூ.20.85 கோடி ரொக்கமும், ரூ.27 கோடி மதிப்பில் மதுபானங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து, மார்ச் 16 ஆம் தேதி முதல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து மாநிலத்தில் இதுவரை நடைபெற்ற சோதனைகளில் ரூ.62.42 கோடி மதிப்பிலான‌ பொருட்கள் கைப்பற்றப்பட்டன என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததில் இருந்து பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுக்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ரூ.20.85 கோடி ரொக்கமாகவும், ரூ.70.86 லட்சம் மதிப்பிலான பொருட்களையும், ரூ.27 கோடி மதிப்புள்ள‌
8.63 லட்சம் லிட்டர் மதுவையும் பறிமுதல் செய்துள்ளனர்.
ரூ.1.47 கோடிக்கு மேல் மதிப்புள்ள 211.23 கிலோ போதைப்பொருள், ரூ.9 கோடிக்கு மேல் மதிப்புள்ள 15 கிலோவுக்கு மேல் தங்கம், ரூ.27 லட்சத்துக்கும் அதிகம் மதிப்புள்ள 59.04 கிலோ வெள்ளி, ரூ.9 லட்சம் மதிப்புள்ள‌ 21.17 காரட் மதிப்புள்ள வைரம் பறிமுதல் செய்யப்பட்டது.பணம், மது, போதைப்பொருள், விலைமதிப்பற்ற உலோகங்கள் மற்றும் இலவச விநியோகத்திற்காக கொண்டு செல்லப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்தது தொடர்பாக அதிகாரிகள் 969 வழக்குக‌ளை பதிவு செய்துள்ளனர்.தும்கூரில் வெள்ளிக்கிழமை அதிரடி சோதனை நடத்திய தேர்தல் அதிகாரிகள், படவாடி சோதனைச் சாவடியில் பேருந்தில் 14.63 லட்சம் பணம் மற்றும் 128 கிராம் தங்க நகைகளை எடுத்துச் சென்ற ஆந்திராவைச் சேர்ந்த நாகபூஷண் என்பவரிடம் பறிமுதல் செய்தனர்.பெங்களூருவில் இருந்து ஓசூர் நோக்கிச் சென்ற காரில் நேற்று தமிழகம் ஜூஜுவாடி சோதனைச் சாவடியில் ஆவணம் இல்லாத ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.பெலகாவி மாவட்டம் கானாபுரா தாலுகாவில் உள்ள கனகும்பி சோதனைச் சாவடியில் 7 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. கோவாவில் இருந்து பெல்காமுக்கு பேருந்தில் பணம் எடுத்துச் சென்ற நபர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.பெல்லாரி மாவட்டம், காம்ப்லியாவில் உள்ள கோட்டே சோதனைச் சாவடியில் ஆவணம் இல்லாமல் பைக்கில் கடத்திச் செல்லப்பட்ட ரூ.8.23 ​​லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.கலபுர்கி மாவட்டம் சித்தாப்பூர் தாலுகாவில் 6 லட்சத்து 37 ஆயிரம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அரசுப் பேருந்தில் இருந்து 114 கிராம் தங்கம், 3 கிலோ 289 கிராம் வெள்ளி ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.மறுபுறம், தொட்டபள்ளாபூர் தாலுகா ஹுலிகுண்டே சோதனைச் சாவடியில் ரூ.2 லட்சம், ஷிமோகா மாவட்டம் ஷிகாரிபுரா தாலுகா ஷிரலகோப்பா-சித்ரதஹள்ளி சாலையில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம், தார்வாட் வேளாண் பல்கலைக்கழகம் அருகே சோதனைச் சாவடியில் ரூ.3 லட்சத்து 70 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.மாநிலத்தில் 28 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.