கர்நாடகத்தில் வாக்காளர்களை கவர காங்கிரசின் புதிய திட்டங்கள்

பெங்களூரு,ஜன. 23– 3 திட்டங்கள் அறிவிப்பு கர்நாடகத்தில் இன்னும் 4 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது. இதற்காக காங்கிரஸ் தலைவர்கள் மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள். அதே நேரத்தில் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பல்வேறு அறிவிப்புகளையும் காங்கிரஸ் கட்சி அறிவித்திருக்கிறது. அதன்படி, வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உதவித் தொகை மற்றும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ரேஷனில் 10 கிலோ அரிசி வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. தலித் மற்றும் மாணவர்களுக்காக… இந்த நிலையில், சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக 5 முக்கிய திட்டங்களை அறிவிக்க காங்கிரஸ் திட்டமிட்டு இருந்தது. அவற்றில் 3 முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்னும் 2 திட்டங்களை கூடிய விரைவில் காங்கிரஸ் தலைவர்கள் அறிவிக்க உள்ளனர். அது தலித் ஓட்டுகளை பெறுவதற்காகவும், மாணவ, மாணவிகளை கருத்தில் கொண்டும், 2 திட்டங்களை காங்கிரஸ் கட்சி அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தலித்துகளுக்கு பா.ஜனதா இடஒதுக்கீட்டை அதிகரித்துள்ளதால், அந்த சமுதாய மக்களின் ஓட்டுகளை பெறும் நோக்கத்தில் தனியாக ஒரு இலவச திட்டத்தையும், அதுபோல், மாணவ, மாணவிகளுக்கு என்று மற்றொரு இலவச திட்டத்தையும் அறிவிக்க காங்கிரஸ் தலைவர்கள் தயாராகி வருகின்றனர். தற்போது நடைபெற்று வரும் மக்கள் குரல் நிகழ்ச்சியின் போதே அந்த 2 திட்டங்களும் அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.