கர்நாடகத்தில் வெப்ப அலை வீசும் அபாயம்

பெங்களூர், மார்ச் 5: பெங்களூர் நகரின் சராசரி வெப்பநிலைஇரண்டு டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) கணித்திருப்பதால், பெங்களூரில் பொதுமக்கள் இந்த ஆண்டு வெப்பமான கோடையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
பிப்ரவரியில் வெப்பமான கோடைகாலத்தின் அறிகுறிகள் தென்பட்டது. அப்போது நகரம் சராசரியாக 34.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையைப் பதிவு செய்தது. இது பிப்ரவரி மாதத்தில் இயல்பை விட கிட்டத்தட்ட 3.6 டிகிரி செல்சியஸ் அதிகமாகும்.
“ஆண்டுதோறும், வெப்பநிலை அதிகரிப்பதை நாங்கள் காண்கிறோம், இது புவி வெப்பமடைதலின் தெளிவான அறிகுறியாகும்” என்று ஐஎம்டி பெங்களூரின் மூத்த விஞ்ஞானி ஏ.பிரசாத் தெரிவித்தார்.
மார்ச் மாதத்திற்கான நகரின் சராசரி வெப்பநிலை 33.4 டிகிரி செல்சியஸ் ஆகும். இந்த ஆண்டு, வெப்பநிலை சில நாட்களில் 35.5 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
“அதேபோல், ஏப்ரல் மாதத்தின் சராசரி வெப்பநிலை 34.1 டிகிரி செல்சியஸ் ஆகும். இது 36 டிகிரி செல்சியஸ் வரை உயர‌லாம். மே மாதத்தில், சராசரியாக 33.1 டிகிரி செல்சியஸிலிருந்து 35 டிகிரி செல்சியஸ் வரை எட்டும்” என்று பிரசாத் விளக்கினார்.
மாநிலத்தின் பிற பகுதிகளிலும் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும். பல மாவட்டங்கள், குறிப்பாக கடலோரப் பகுதிகள் மற்றும் கர்நாடகாவின் வடக்கு உள்பகுதிகள் மார்ச் மாத இறுதியில் வெப்பம் உயரக்க்கூடும். இது ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலும் தொடரலாம் என்றார்.