கர்நாடகத்தில்2 நாட்களுக்கு கனமழை

பெங்களூரு, செப். 14: பெங்களூரு உட்பட மாநிலத்தின் பல மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெங்களூரில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. மழையால் பெங்களூரு முழுவதும் பரவலாக‌ போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பெங்களூரில் இன்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
காலையில் வெயில் அடித்தாலும், மாலையில் மழை பெய்யும் என தெரிவித்துள்ளது. கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா ஆகிய மாவட்டங்களில் வியாழக்கிழமை நல்ல மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.
பெங்களூரு மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் செப்டம்பர் 16-ம் தேதி வரை கனமழை பெய்யும். அதே நேரத்தில் பகலில் அதிக அளவில் வெயிலின் வெப்பம் இருக்கும். வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மாநிலத்தில் மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெங்களூரு உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழை பெய்து வந்தாலும், ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்யாததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மழை வர விவசாயிகள் வேண்டி வருகின்றனர்.