கர்நாடகத்தை புரட்டிய மழை: 17 பாலங்கள் மூழ்கின – பயிர்கள் நாசம்

பெங்களூர் /சிவமொக்கா /பீதர் : செப்டம்பர். 12 – மாநிலத்தின் பல பகுதிகளில் பெய்துவரும் பெரும் மழையால் இளைஞன் ஒருவன் இறந்திருப்பதுடன் ஏரி குளங்கள் நிரம்பி வழிவதுடன் அறுவடைக்கு தாயாராய் இருந்த விவசாயிகளின் விளை பயிர்கள் தண்ணீரில் மூழ்கி விவசாயிகள் கண்ணீரும் கம்பலையுமாக பரிதவிக்கின்றனர். உத்தர கன்னடா மாவட்டத்தில் பெய்த மழைக்கு சித்தாபுரா தாலூகாவின் க்யாதகி கிராமத்தில் சந்திரசேகர் (24 ) என்பவர் உயிரிழந்துள்ளார். மேற்கு கடலோர பகுதிகளில் மழையின் ஆர்ப்பபாட்டத்தால் பல சிறிய நதிகள் பொங்கி வழிவதுடன் இதனால் 17 பாலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. பெலகாவி மாவட்டத்தில் உள்ள பாலங்கள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளன. ஒவ்வொரு கணமும் தண்ணீர் அதிகரித்துக்கொண்டே வருவதால் வெள்ள பயம் மக்களை வாட்டியுள்ளது. இதனால் நதியோர மக்கள் மிகவும் அச்சத்தில் உயிரை கையில் பிடித்தபடி உள்ளனர். ஹிடகள் அணையிலிருந்து கடப்ரபா நதிக்கு அதிகளவில் தண்ணீர் திறந்து விட்டிருப்பதால் பெலகாவி மாவட்டம் முழுக்க வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. இறந்து போன இளைஞனை 23 வயது சந்திரசேகர நாராயணா என அடையாளம் காணப்பட்டுள்ளது . தொடர்ந்து பெய்து வரும் பெரும் மழையால் வீடு இடிந்து விழுந்துள்ளது. இடிந்த வீட்டில் இருந்த சந்திரசேகர் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயங்களடைந்துள்ளார் . பின்னர் இவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்து போயுள்ளார். மாவட்டம் முழுக்க நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்துவருவதுடன் பட்கல் , ஹொன்னாவரா, குமடா , அங்கோலா , கார்வார் , ஷிர்சி , சித்தாபுரா , தண்டேலி , ஆகிய பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழைக்கு மக்கள் பெரும் அவதிக்குள்ளயுள்ளனர். நதிகள் மற்றும் ஓடைகள் , குளங்கள் நிரம்பி பொங்கி வழிந்து கொண்டுள்ளன. மாவட்டத்தில் இன்னும் மூன்று நாட்களுக்கு இந்த மழை தொடரும் என வானிலை ஆய்வு துறை எச்சரித்துள்ளது. நதியோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் . பெலகாவி மாவட்டத்தில் 17 பாலங்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. இதனால் போக்குவரத்து முழுதுமாய் ஸ்தம்பித்துள்ளது. கோகக் -சிகடொல்லி , முடலாகி -சுனதொல்லி , சுணதொல்லி -படகுண்டி , மூடலகி ,-கமலதிண்ணி , கமலதிண்ணி -ஹன்னஷாடா , குளகோடா -ஹௌராதி , ஹௌராதி – மஹாலிங்கபுரா , குலகோடா -சணக்கொல்லி , சணக்கொல்லி – மூடல்லி , குளகோடா -தவலேஸ்வரா , தவலேஸ்வரா -மகாலிங்கபுரா , ஆகிய பாலங்கள் முழுதும் மழைநீரில் மூழ்கி உள்ளன.